Wednesday, August 2, 2017

1983 ஜூலை இனக் கலவரத்தால் "கறுப்பு ஜூலை' என்ற பெயர் வரலாற்றில் பதிவேறியுள்ளது.
Bildergebnis für ஜூலை வரலாறுகள்
வரலாறு என்பது கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பாகும். அந்த வரலாறு உள்ளதை உள்ளபடி அதாவது நிகழ்ந்தவற்றை எதுவித மாற்றமுமின்றி வெளிப்படுத்துவதாயமைய வேண்டும். திரிபுகளோ, மறைப்புகளோ இடம்பெற்றால் அது வரலாறு என்ற பெறுமதியை இழந்துவிடும். நமது நாட்டில் பாடசாலை மாணவ, மாணவியருக்கு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதர வகுப்பு வரை கட்டாய பாடங்களில் ஒன்றாக வரலாற்றுப் பாடம் உள்ளதுடன், அதே பாடம் குறித்த தரப் பொதுப் பரீட்சையின் கட்டாய பாடமாகவும் உள்ளது.

ஒரு பெறுமதியான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் தேசிய இனத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அவை கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து நிகழ்ந்த நல்லவற்றையும் தீயவற்றையும் கண்டறிந்து எடைபோட்டு எதிர்காலத்தில் பயணிக்க வேண்டிய பாதையைச் செப்பனிட்டுக் கொள்ள கடந்த கால வரலாறு பெரும் துணை ஆற்றும்.

அதனால் தான் இனத்தின் வரலாறு, சமயத்தின் வரலாறு, நாட்டின் வரலாறு, உலகத்தின் வரலாறு என்று பல வரலாறுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் வாழ்ந்த நல்லவர்களின் வரலாறும் அதேபோல் வெறுக்கத்தக்க செயல் புரிந்தவர்களது வரலாறும் கூட பாடங்களாய் அமைந்துள்ளன. வரலாற்றை உறுதிப்படுத்தி உலகுக்கு வெளிப்படுத்த பல்வேறு ஆய்வுகளும் பெருஞ் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நமது நாட்டில் வரலாற்றின் பெறுமதி உணரப்பட்டிருந்த போதிலும் வரலாற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டுமென்று கூறப்பட்ட போதிலும் உண்மை வரலாறு உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தப்படுவதில் தயக்கம் காட்டப்படுகின்றது. மறைக்கப்படுகிறது, திரிபுபடுத்தப்படுகின்றது என்பதே  நிலைமையாக வெளிப்படுகின்றது. நிகழ்ந்தவற்றை மறைத்து மாற்றி வெளிப்படுத்துவது உண்மை வரலாறு அல்ல. அத்துடன் வரலாற்றின் பெறுமதியை இழக்கவும் செய்துவிடும். 


1983 இல் இடம்பெற்ற இனவெறிப் பயங்கரவாதச் செயற்பாடுகளால் ஏழு தமிழர்கள் மட்டுமே கொல்லப்பட்டனரென்றும் எவரொருவரும் காயப்படவில்லை என்றும் அண்மையில் அதிகாரத் தரப்பு கூறியிருந்தது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பதற்கு இதுவோர் எடுத்துக் காட்டு.  அந்த ஜூலைக் கொடுமையில் கொலை செய்யப்பட்ட, வெட்டி கொத்தி காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைப்பது நீதியல்ல.

நிகழ்ந்த கொள்ளைகள், எரிப்புகள், பறிப்புகள் இதுபோன்ற இழி செயல்கள் எதுவுமே நடைபெறவில்லையென்று கூறுவது மனித தர்மமா ? நீதியா? புத்தரின் போதனைக்கு மதிப்பளிப்பதாக புத்த சமயத்திற்கு முதலிடமளிப்பதாகக் கூறப்படும் நம் நாட்டில் பௌத்தத்தின் பஞ்சசீலக் கோட்பாடுகள் ஐந்தில் ஒன்றான பொய் சொல்ல மாட்டேன் என்ற உறுதி மொழி மீறப்படுகின்றது. புத்த பெருமானின் போதனை பௌத்த சமயக் கோட்பாடு அப்பட்டமாக மீறப்படுகின்றது, புறக்கணிக்கப்படுகின்றது, அலட்சியப்படுத்தி குப்பையில் வீசப்படுகின்றது. இதுவே உண்மை. யதார்த்த நிலையும் கூட.

1983 ஜூலை இனக் கலவரத்தால் "கறுப்பு ஜூலை' என்ற பெயர் வரலாற்றில் பதிவேறியுள்ளது. உலகமே அதிர்ச்சியடைந்த அந்த இன வெறிப் பயங்கரவாதம் நடைபெறவேயில்லை என்று எதிர்காலத்தில் கூறப்பட்டாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவு மழுங்கிய சிந்தனை நம் நாட்டில் உள்ளது. இக்கலவரம் இடம்பெற்ற காலத்தில் சுகாதார அமைச்சராகவிருந்த டாக்டர் ரஞ்சித் அத்தப்பத்து இலங்கையர்கள் ஆறு பேரில் ஒருவர் மனநோயாளி என்றார். இன்று அவர் இருந்திருந்தால் ஆறு பேரில் ஐவர் மனநோயாளிகள் என்றும் கூறக்கூடும். 


எது எவ்வாறாயினும் குறித்த வெறியாட்டம் உலகை உலுக்கியது. அண்டை நாடான இந்தியாவின் பிரதமராயிருந்த இந்திராகாந்தி அம்மையார் தன் நாட்டின் வெளிவிவகார அமைச்சரான பி.வி. நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பியது வரலாறு. 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் அதாவது ராஜீவ்  ஜே.ஆர். ஒப்பந்தம் ஏற்பட அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க காரணமாயிருந்ததும் குறித்த 1983 ஜூலை வெறியாட்டமே என்பது பதிவாகும்.

அது மட்டுமல்ல இந்நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்வும் அதேபோல் சர்வதேசம் இலங்கையை நோக்கிய பார்வையைச் செலுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின்  நம் நாடு பொறுப்புக் கூற வேண்டிய குற்றவாளியின் நிலைக்கு உள்ளாக  வேண்டிய நிலைக்கு ஆளானதும் குறித்த ஜூலைக் கொடுமைகளே என்பதை வரலாறு தெளிவாகவே பதிவேற்றியுள்ளது.

பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு போகாது. நம் நாட்டில் மறைக்கப்பட்டாலும் உலகம் மறக்காது இந்நாட்டில் இனப் பிரச்சினை. தமிழர்  சிங்களவர் உறவு பாதிக்கப்பட வழிசெய்ததில் முக்கிய இடம்பெற்ற அந்த வெறியாட்டத்தை அது நடைபெறவில்லை, பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறுவது கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கப்படும் இன உறவுக்கும் நல்லெண்ணத்திற்கும் இடையூறாகவே அமையும்.


கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு என்று வரையறுத்துக் கூறப்படும் போது அக்கொடுமை நிகழ்ந்த காலத்தில் அதனுடன் தொடர்புபட்டதாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கையை எதனுடன் இணைப்பது? சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை. அதிலேயே இவ்வாறான கொலைக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.நாட்டில் எங்குமே பாதுகாப்பில்லை என்று முன்னாள் பிரதமரும் அன்றைய பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் கூறியதை எவராவது  இல்லையென்பார்களா?


கொழும்பிலிருந்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு அகதி முகாம்களில் அடைக்கலமான தமிழர்களை வட பகுதிக்கு அழைத்துச் செல்ல இந்தியா அனுப்பிய சிதம்பரம் என்ற கப்பலைத்தான் மறைக்க முடியுமா? சிங்களப் பேரறிஞரான ஈ.டபிள்யூ. அதிகாரம் என்பவர் நடைபெற்ற கொடுமைகளை சகிக்க முடியாது இனவெறியர் மனநோயாளிகள் என்று கூறியமையும் பதிவிலுள்ளது.இன்று உலக அரங்கில் இனப் பிரச்சினையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்தவற்றுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய காலஎல்லை நிர்ணயிக்கப்பட்டு பிணையில் விடப்பட்டுள்ள குற்றவாளியின் நிலையிலுள்ள இலங்கை உலகம் ஏற்க முடியாத பொய்யான தகவலை வெளியிடுவதன் மூலம் பாதிப்பை எதிர்கொள்ளும் வழி ஏற்படலாமல்லவா?


பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்கென்று கூறப்படும் பொய்கள் இம்மக்களுக்கும் நன்மைதரப் போவதில்லை. அதேபோல் சிறுபான்மை மக்கள் மனதில் நாட்டின் மீது நம்பிக்கையையும் ஊட்டப் போவதில்லை. இதுவே உண்மை நிலை. சிங்கள மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். அது மட்டுமல்ல சிங்கள மக்களை இன வெறியர்களாக கொடுமையானவர்களாக உலகுக்கு காட்டவும் இது வழிகோலும் என்ற உண்மையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.


நமது நாட்டின் ஜூலை மாதங்களின் இறுதி வாரங்கள் வரலாற்றில் பதியப்பட்டவையாகவுள்ளன. 1977 ஜூலை மாத இறுதி வாரம் இனவெறிப் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றி பெற்ற கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதியில் தமிழருக்கெதிரான முப்பத்திரெண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. 


அன்றைய ஆண்டில் பொதுத் தேர்தலின் பின்னர் தமிழருக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் 1979 இலும் அதே நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. 1981 ஆகஸ்ட் பதினைந்தாம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தை மையப்படுத்தி வன்முறை ஏவப்பட்டது. அவ்வாண்டு அக்டோபர் மாதம் நடமாடும் சேவைகள் மூலம் களவாடப்பட்ட வானொலி, தொலைக்காட்சிப்  பெட்டிகளுக்கு எதுவித ஆதாரமும் கேட்கப்படாமல் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது. அதாவது கொள்ளைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.


1983 ஜூலை இனவெறிப் பயங்கரவாதத்தின் சூடு இன்னும் தணியாது உலகம் முழுவதும் பேசப்படுமொன்றாக நிலைத்துள்ளது. அதைத் தொடர்ந்து 1987 இல் இந்திய அரசின் கண்டிப்பான அழுத்தத்தினால் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவது தவிர தனக்கு எல்லாம் முடியும் என்று ஆணவத்துடன் கூறிய அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இறங்கி வந்து ஒப்பந்தம் செய்யும் நிலை ஏற்பட்டது.


வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் தமிழ் மொழிக்கு நாட்டில் தேசிய மற்றும் அரச கரும மொழிகள் அந்தஸ்து தமிழரும் தேசிய இனத்தவர்கள் என்பதும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி தமிழ் என்பதும் 1987 ஜூலை இலங்கை  இந்திய ஒப்பந்தத்தின் பெறுபேறாகும். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இலங்கை அரசாங்கம் விருப்புடன் செய்யப்பட்டதோ தமிழரின் நியாயமான போராட்டத்தின் பெறுபேறோ அல்ல. இந்தியாவின் அழுத்தமே காரணம் என்பதை நம்மில் பலர் புரியாதுள்ளனர்.

இவ்வாண்டு அதாவது 2017 ஜூலை மாத இறுதியில் சீன நாட்டுடன் தொண்ணூற்றொன்பது ஆண்டு குத்தகை அடிப்படையில் அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதி இலங்கையால் ஒப்பந்தம் செய்து கையளிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனை செலுத்த வழியின்றி இந்நிகழ்வு நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. காணி சொத்து உறுதிகளைப் பிணையாக வைத்து கடன் வாங்குவதற்கு இது ஒப்பானதாகும். உரிய காலத்தில் கடன் மீளச் செலுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். வல்லவனுக்கு வளைந்து கொடுத்துத் தானே ஆக வேண்டும். விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறப்பட்டு நாட்டு குடிகளான நாம் ஏமாற்றப்படுகின்றோமா? 


வரலாறு என்பது  நாம் படித்துப் பார்த்து ரசிப்பதற்கல்ல. கடந்து வந்த பாதையில் விட்ட தவறுகள் எவை என்பதை அறிந்து, புரிந்து மீளவும் அவை நிகழாவண்ணம் ஏற்றவை மேற்கொள்ள வழிகாண்பதற்கானது. நோய் என்ன என்பதை ஆராய்ந்து அது ஏற்பட காரணி என்ன என்பதைத் தெரிந்து வைத்தியம் செய்பவரே முறையாகக் கற்றறிந்த அனுபவம் மிக்க வைத்தியர்.


அதேபோல் நாட்டிலே புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைந்து நாட்டிலே இனங்களுக்கிடையே தேசிய சகவாழ்வு, நல்லெண்ணம், புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமென்ற மனப்பூர்வமான உண்மையான இதயசுத்தியான சிந்தனை இருந்தால் நிகழ்ந்த கொடுஞ்செயல்கள் மீளவும் இடம்பெறாதிருக்க வழி செய்ய வேண்டும். அதனால் வரலாற்றை மறைக்காமல் திரிபுபடுத்தாமல் உண்மையை உள்ளதை வெளிப்படுத்தி நாட்டுக்கு நன்மை செய்ய சகலரும் முன்வர வேண்டும்.எது எவ்வாறோ போர்த்துக்கேயரிடம் நாட்டை தானமாக ஒப்படைத்த கோட்டை அரசின் ஒப்பந்தமும் ஜூலை மாதம் தான் இடம்பெற்றதோ தெரியவில்லை.

அரசியலமைப்பு சீர்திருத்தம் முடிவுக்கு வருவதை பார்க்க வேண்டிய தேவைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கின்றது.
Bildergebnis für அரசியலமைப்பு

மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டமை எதிர்பார்க்கப்பட்ட விடயமல்ல. உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெற வேண்டுமென அரசியலமைப்பு குறிப்பிடுகிறது. ஆனால்  ஒத்திவைக்கப்பட்டமை ஆச்சரியமானதாக அமையவில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சில வாரங்களுக்கிடையில் உள்ளூராட்சி தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படுமென அரசாங்கத் தலைவர்களினால் பிரகடனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றது.

இரு வாரங்களுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கும் ஏனைய கட்சித் தலைவர்களுக்குமிடையில் கருத்தொருமைப்பாடு எட்டப்பட்டிருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.  பழைய தொகுதிவாரி முறைமை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அதாவது இவை இரண்டில் 60:40 என்று கொண்டதாக தேர்தல் நடத்தப்படுமென அவர் கூறியிருந்தார்.

முன்னர் 70:30 என்ற விகிதத்தில் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூராட்சி தேர்தல் முறைமை தொடர்பான அதிகளவுக்கு தாமதமாகியிருக்கும் திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர் இந்த ஆண்டுக்குள் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்குமென அமைச்சர் முஸ்தபா கூறியிருந்தார். எவ்வாறாயினும் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தனது வார்த்தைகளுக்கு அமைய செயற்படுவதற்கு பதிலாக அரசாங்கம் இப்போது மாகாண சபை தேர்தல்களை ஒத்தி வைப்பதென தீர்மானித்திருக்கிறது.

அவை இந்த வருடம் இடம்பெறவிருந்தன.  வட மத்தி, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபைகளுக்கு இந்த ஆண்டு தேர்தல்கள் நடத்தப்படவேண்டியிருந்தன. அக்டோபர் 1 இல் இந்த மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைகிறது. அதேவேளை 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு நாடப்பட்டிருந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய முறைமையின் கீழ் தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையை மாற்றி பழைய தொகுதி வாரி முறைமையும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் கலந்ததாக தேர்தல் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.


இந்த ஏற்பாட்டின் பிரகாரம் மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தியமைக்கப்படும். புதிய முறைமைக்கு வழியமைத்துக் கொடுக்கும் விதத்தில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படும். மாகாண சபைகளுக்கு 60% மான உறுப்பினர்கள் பழைய தொகுதி வாரி முறைமையிலும் 40% உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையிலும் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் காணப்படும் பிரச்சினையானது உத்தேச சீர்திருத்தங்கள் தொடர்பாக சகல கட்சிகளுக்குமிடையில் இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தமையாகும்.


ஐ.தே.க. மற்றும் சு.க. ஆகியவை பெரிய கட்சிகள். அவை  பழைய தொகுதிவாரி முறைமையை கொண்டிருப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் அழுத்தத்தை கொண்டிருக்கின்றன.  குறிப்பிட்ட ஒரு தொகுதியில் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற வாக்காளர் தெரிவு செய்யப்படுபவராக பழைய தொகுதிவாரி முறைமையின் கீழ் விளங்குவார். ஆனால் சிறிய கட்சிகள் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமைக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. இந்த முறைமையானது அக்கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைக் குறிப்பிட்ட தொகுதியொன்றில் பெற முடியாது போனாலும கூட அக்கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் கிடைப்பதை உறுதிப்படுத்துவதாக அமையும்.


அரசாங்கம் மூன்று காரணங்களை கொடுத்திருக்கின்றது. மாகாண 
சபைத் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு ஒரு காரணம் மட்டுமன்றி மூன்று காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காரணங்களும் தனக்கே உரித்தான பெறுமானத்தை கொண்டுள்ளன. தேர்தல் முறைமை தொடர்பாக உள்ளூராட்சி சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கு அதே அடிப்படையில் மாகாண சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது என்பது முதலாவது காரணமாகும்.


உள்ளூராட்சி முறைமையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான கோட்டாவை மாகாண சபை முறைமைகளுக்கு உள்ளீர்த்து அனுசரணை வழங்குவது என்பது மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான இரண்டாவது காரணமாகும். அரசாங்கத்தின் யோசனையானது மாகாண சபை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு சகல அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் தமது வேட்பாளராக மாகாண சபை தேர்தல்களின் போது குறைந்தது 30% பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்குவதற்கு கட்டுப்பட்டவர்களாக மாற்றுவதாகும்.

அரசாங்கம் எடுத்திருக்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தின் அடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அரசியல் தீர்மானம் எடுக்கும் சகல அமைப்புகளிலும் அதிகரித்துக் கொள்வது என்பது அமைந்திருக்கின்றது. கடந்த வருடம் உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. உள்ளூராட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 25% கோட்டாவை உள்ளீர்த்துக் கொள்வதென திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வேட்பாளர்களுக்கான பட்டியலுக்கு அப்பால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான பட்டியலுக்கு அப்பால் அவர்கள் தெரிவு செய்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டு எவ்வாறாயினும் அதேபோன்ற கோட்டா பாராளுமன்ற மட்டத்தில் வழங்கப்படாதென அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

அத்துடன்  அந்த எதிர்பார்ப்பானது ஆட்சியின் உயர்மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான தன்மையை ஏற்படுத்துவதாக  தோன்றியது. அத்துடன் உள்மட்டதிலிருந்து பெண்களை மேல் நோக்கி அணி திரட்டுவதற்கான எதிர்பார்ப்பாகவும் அமைந்திருந்தது. உள்ளூராட்சி நிர்வாகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2% ஆக மட்டுமே உள்ளது. மாகாண சபைகளில் 4% ஆகவும் பாராளுமன்றில் 6% ஆகவும் காணப்படுகின்றன.

அதேவேளை இலங்கையில் தற்போது தீர்மானம் மேற்கொள்ளும் விடயத்தில் பல்லின பல்மத பிரதிநிதித்துவத்தின் சமூக மட்டத்திலான தேவைப்பாடு காணப்படுகின்றது. அத்துடன் அந்த ஆட்கள் முழு சமூகத்தினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த நாடக் கூடாதெனவும்  நாட முடியாதெனவும் அங்கீகரிப்பதற்கு போதாத தன்மை இப்போதும் இருந்து வருகின்றது. இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்களாவர்.

ஆதலால் மாகாண சபையில் பெண்களுக்கான கோட்டாவை ஏற்படுத்தல் சாதகமான முன்னேற்றமாகும். சகல மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதன் மூலம் அரசாங்கம் அதிக பணத்தை சேமிக்க முடியுமெனவும அதற்கமைய மாகாண சபை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தேவையாக மூன்றாவது காரணம் வழங்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளை வெவ்வேறு பட்ட திகதிகளில் நடத்துதல் அதாவது மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடையும் போது நடத்துவதால் தேர்தல் இயந்திரமானது பல தடவை பயன்படுத்த வேண்டிய தேவைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென அர்தத்தப்படுகிறது.

9 மாகாண சபைகள் உள்ள நிலையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும் 9 வெவ்வேறான தேர்தல்களை வேறுபட்ட காலங்களில் நடத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. முன்னைய அரசாங்கம் இதனை செய்தது. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய நிர்வாகத்தில் மாகாண சபை தேர்தல்கள் மற்றும் ஏனைய தேர்தல்கள் அவர்கள் விரும்பிய போதெல்லாம் நடத்தப்பட்டன. மக்களின் ஆணையை தொடர்ந்தும் தாங்கள் பெற்று வருவதாக மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் காண்பிக்க வேண்டிய தேவையெல்லாம் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
காலக்கெடு தேவைப்பட்டது.


ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்ட போதெல்லாம் அரசாங்கம் தேர்தலை நடத்தியது. அவர்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கும் மக்களின் முழு மனதான ஆதரவை பெற்றிருக்கின்றார்கள் என்ற ஆதாரத்தை முன்வைப்பதற்கும் வலுவான ஆயுத மற்றும் நிதி வளங்களில் அவர்கள் கவனத்தை செலுத்தியிருந்தனர். ஒரே நாளில் சகல மாகாண சபை தேர்தல்களையும் நடத்துவது இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அமைவதுடன் அதற்கான பாரிய செலவினத்தையும் குறைப்பதாக அமையும்.


இத்தகைய சீர்திருத்தமானது அரசாங்கத் தலைவர்கள் மீதான அழுத்தத்தையும் குறைப்பதாக அமையும். ஏனெனில் அவர்கள் தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டிய தேவை இருந்த நிலையில் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவது அந்த அழுத்தங்களை குறைக்கும். இதனால் அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளிலும் பார்க்க அரசியல் ரீதியான செயற்பாடுகளில் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு சாத்தியமான காலத்தை வழங்குவதாகவும் இது அமையும்.

எவ்வாறாயினும் மாகாண சபை சட்டத்தை திருத்துதல் மற்றும் தேர்தல்களை பிற்போடுதல் போன்றவற்றுக்கான இந்த நியாயப்படுத்தல்களுக்கு ஜனநாயகத்தின் உயிரோட்டத்திற்கு கிரமமாக தேர்தல்கள் நடத்துவது முக்கியமான என்பது தொடர்பாக சமநிலைப்படுத்தப்பட்ட தன்மை தேவைப்படுகிறது. கிரமமானதும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் அரசியல் அரங்கை வளமூட்டுவதற்கு அனுசரணையாக அமையும். இல்லாவிடில் ஊழல், மோசடி நிறைந்ததாக அது உருவாகிவிடும்.  


விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றமை தங்களுக்கு தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையுடன் இறைமையை கொண்டிருப்பதற்கும் ஆட்சி செய்வதற்கான உரிமையை வழங்கியிருக்கின்றது என்ற அடிப்படையில்  முன்னைய ராஜபக்ஷ செயற்படுவதற்கு இடமளித்திருந்தது. தேர்தல்களை பிற்போடுவது என்பது பாரதூரமான சூழ்நிலைகளில் மட்டுமே இடம்பெற முடியும். அத்தகைய சூழ்நிலை தற்போது இலங்கையில் இல்லை. காலவரையறையற்ற விதத்தில் வைக்கப்பட்டிருக்காமல் தேர்தல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.

தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படும் போது கவனமாக காலவரையறை தேவைப்படுகின்றது. காலவரையறையற்ற விதத்தில் இழுபட்டுச் செல்லாமல் தேர்தலை நடத்துவதற்கான தேவைப்பாடு காணப்படுகிறது. 
அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய அரசியலமைப்பு வரைபுக்கான கட்டத்தை எட்டியுள்ளன. அந்த நடவடிக்கைகளை நிறைவேறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.  தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஐ.தே.க. சு.க. வுக்குமிடையில் உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு மாற்றத்துக்கான உண்மையான சாத்தியப்பாட்டை அது வழங்கியுள்ளது.  


கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை வெற்றி கொள்ளக்கூடியதாக இது அமைந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் உள்ளூராட்சி அல்லது மாகாண சபை தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்திலுள்ள கட்சிகளை ஒன்றுக்கொன்று எதிரானவையாக நிறுத்துவதாக அமைந்துவிடும். புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் இடம்பெறும் வரை தேர்தல் ஒத்தி வைப்பது தொடர்பாக குறிப்பிடாத காரணமாக இது அமைந்திருக்கிறது. எவ்வாறாயினும் இந்த ஒத்திவைப்பானது கடுமையானதும் பொறுப்புக் கூறலுமான காலவரையறையை கொண்டதாக இருக்க வேண்டும்.

தாமதப்படுத்துதல், தேர்தல் சட்டங்களின் மறுசீரமைப்பு தொடர்பாக கருத்தொருமைப்பாட்டை எட்ட இயலாமல் இருப்பதாக அமைந்துவிடும். அதேவேளை தாமதப்படுத்துதல் ஜனநாயகத்துக்கு பாதிப்பானதாகவும் அமையும். இந்நிலையில் அரசாங்கம் தனது செயற்பாட்டை வெளிப்படுத்துவதை பார்க்க வேண்டியுள்ளது. அரசியலமைப்பு ரீதியான சீர்திருத்தம் தேவைப்பாடாக உள்ளது. இந்த நடவடிக்கைகள் இரண்டு வருடங்களாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் முடிவுக்கு வருவதை பார்க்க வேண்டிய தேவைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கின்றது.

Monday, July 31, 2017

சித்திரவதையை இல்லாதொழித்தல்
Bildergebnis für சித்திரவதை

சித்திரவதை தொடர்பாக தெரிவிக்கப்படுபவற்றில் உண்மை இருக்குமானால் அதனை நியாயப்படுத்துவதற்கு தேசிய இறைமையைக் காரணமாகக் கொண்டிருக்க முடியாது. சாக்குப் போக்காக  இடம்பெற்றாலோ அல்லது நியாயப்படுத்தப்பட்டாலோ எவ்வாறாயினும் சித்திரவதையானது மனிதாபிமானமற்றது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.அதே போன்று தேச மட்டத்திலோ அல்லது சர்வதேச ரீதியிலோ பயங்கரவாதம் தொடர்பாகவும் சித்திரவதையை அங்கீகரிப்பதற்கு அது காரணமாக அமையாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சித்திரவதையை பயங்கரவாதத்திற்காக நியாயப்படுத்த முடியாது. 


 பயங்கரவாதத்துக்கு எதிரான உத்தேச சட்டமூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாகக் கொண்டுவரப்படுவதாயின் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது பொலிஸ் அதிகாரக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வது தொடர்ந்து நீடித்திருப்பதானது சித்திரவதை தொடர்வதற்கான சாத்தியப்பாட்டை அதிகளவுக்கு கொண்டிருக்கும். பயங்கரவாத நபரென சந்தேகிக்கப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது சுயாதீனமாக ஒப்புதல் வாக்குமூலமளிக்க அவர் விரும்புவார். அவரை உடனடியாக 
நீதிமன்றத்தின் முன் கொண்டுவரக்கூடியதாக இருக்க வேண்டும்.


உத்தேச சட்டமூலத்தின் திருத்தமாக இது இருக்குமென அர்த்தப்படுத்த முடியாது. அந்த விடயம் மட்டுமே காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது சித்திரவதையை இல்லாதொழிப்பதற்குப் போதுமானதாக இருக்குமென கூற முடியாது. இலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது சித்திரவதை அதிகளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.எவ்வாறாயினும் ஏனைய விடயங்களுடன் இதுவொரு விடயமாக உள்ளது. இலங்கை சட்ட அமுலாக்கல் முறைமையானது அதிகளவுக்கு மனிதாபிமானமுடையதும் நாகரிகத் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது என்பதை உருவாக்குவதற்கான ஏனைய பல விடயங்களில் சித்திரவதையை இல்லாதொழித்தல் ஒரு விடயமாகும்.

ஏனைய விடயங்களாக அமையக் கூடியவை;01. கடுமையான ஒழுக்கம்
02. விழிப்புணர்வும் கல்வியும் பயிற்சியும்
03. குற்றவாளிகளை துரிதமாக தண்டித்தல்
04. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உன்னிப்பாக கண்காணிக்கப்படல்
05. ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் போன்ற அரசாங்கத்தின் தலைவர்கள் சித்திரவதையை தெளிவான முறையில் கண்டித்தல் என்பனவாகும். இந்தக் கண்டனம் செய்யும் விடயமானது வெறுமனே சம்பிரதாயபூர்வமாக இருக்கக் கூடாது. ஆனால், இதய சுத்தியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். எதிரணித் தலைவர்களும் அவ்வாறு செய்வார்களேயானால் அது சிறப்பானதாக அமையும். கூட்டு எதிரணியும் இதில் உள்ளடங்கும். 
விசேட அறிக்கையாளரின் அறிக்கை


மனித உரிமைகளை மேம்படுத்தல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான விசேட அறிக்கையாளரின் இலங்கை விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்த விடயம்   சட்டம், கொள்கைகள் மற்றும் பயங்கரவாத்துக்கு எதிரான போராட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை வென்றெடுத்த முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதே என்று கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு ஏற்ப அளவீடு செய்யப்படுவதாக இது அமைந்தது. இந்த விடயத்தில் விசேட அறிகையாளர் தனது அறிக்கையில் இரு முக்கியமான விடயங்களை முன்னிறுத்தியிருந்தார். எந்தவொரு உணர்வுள்ள நபரும் அதற்கு இணங்காத தன்மையைக் கொண்டிருப்பது கடினமாகும். 


அரசாங்கம் மாற்றமடைந்த போதும் அல்லது பல்வேறு பிரகடனங்களும் உறுதிப்பாடுகளும் வழங்கப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்புத் தரப்பில் 
சித்திரவதை இருந்து வருவதாக தென்படுதல்.பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திலும் ஏனைய விடயங்களுக்கும் கொண்டிருத்தல்


நீதியமைச்சருக்கும் விசேட அறிக்கையாளருக்குமிடையில் முரண்பாட்டைக் கொண்டிருந்த விடயமாக இந்த இரண்டாவது விடயம் பிரதானமாக அமைந்திருந்தது. விசேட அறிக்கையாளர் விமர்சிக்க விரும்பிய ஏனைய விடயங்களும் காணப்பட்டன. யுத்த காலத்திலும் அதன் பின்னரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆயுதப் படைகளின் உறுப்பினர்களை விசாரணை செய்யாமை போன்ற ஏனைய விடயங்கள் குறித்து விசேட அறிக்கையாளர் விமர்சிக்க விரும்பியிருந்தார். அத்துடன்  நல்லிணக்கம், சமாதானம், தமிழ் சமூகத்தின் நலிந்த தன்மை தொடர்பான விடயங்கள் குறித்தும்  பொதுவான விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார். 
கேள்விக்குரிய அறிவிப்புகள்சித்திரவதை தொடர்பான அவரின் அறிக்கையில் ஏதாவது பக்கச்சார்பான கேள்விகள் இருக்கின்றதா?
அவரின் விபரங்கள் முற்றிலும் சரியானவையா?

அவர் சரியான மூல வளங்களைப் பெற்று அவற்றை உறுதிப்படுத்திக் கொண்டாரா?

அவர் பயன்படுத்திய தீர்க்கமான மொழி பிரயோகமானது நல்லிணக்கம், பதிலளிக்கும் கடப்பாடு, சமாதானம் என்பனவற்றுக்கன பாதையில் நாடு செல்வதற்கு உதவியாக அல்லது தடையாக அமைந்திருக்கிறதா? 

இதேவேளை அவரின் அறிக்கையானது விஜயத்தின் பூர்வாங்க கண்டுபிடிப்புகளாகவே அமைய வேண்டும் என்பதையும் அதுவே அறிக்கையின் தலைப்பாக இருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானதாகும்.


முதலாவதாக நாங்கள் சித்திரவதை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சூழ்நிலை குறித்து அவர் எவ்வாறு அறிக்கையிட்டிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.  கண்டுபிடிப்புகளாக அறிவிக்கப்பட்ட இரு விடயங்கள் முற்றிலும் கேள்விக்குரியவையாக இருக்கின்றன. 

துன்புறுத்தல், தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு அனைத்து சமூகங்களுமே இலக்காக்கப்பட்டுள்ளன. அத்துடன் எந்தவொரு நபரும் விடுதலைப் புலிகளுடன் மறைமுகமாக தொடர்பு வைத்திருக்கின்றார் என்று சந்தேகப்பட்டிருந்தாலும் தடுத்து வைத்தல் மற்றும் சித்திரவதை அபாயத்தை உடனடியாக எதிர்கொள்வது தொடர் ந்து இருந்து வருகிறது.

இலங்கையில் இத்தகைய நடவடிக்கைகள் பாதுகாப்புத் துறையில் மிக ஆழமாக காணப்படுகின்றன. சகல ஆதாரங்களும் சித்திரவதையை பயன்படுத்துவது தொடர்ந்து இருந்துவருகிறது என்ற முடிவுக்கு கொண்டு செல்கின்றன. கிரமமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்கள் தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவது  தொற்றுநோயாக தொடர்ந்து இருந்து வருகிறது.


"முழு சமூகங்களும்' என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். அத்துடன்  உடனடியாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் நெருக்கடி இருந்து வருவது குறித்தும் அவர் கூறியுள்ளார். முழு சமூகங்களும் என்று அவர் முதலாவதாக குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் கேள்விக்குரியவையாகும். அவர் கடந்த காலம் பற்றி கதைத்திருக்கவில்லை. நிகழ்காலம் குறித்துக் கதைத்திருக்கிறார்.

இரண்டாவது அறிவிப்பும் முற்றிலும் கேள்விக்குரியதாக இருக்கிறது. கண்டறிந்தவை என அவர் கூறுகின்ற போதிலும் சகல ஆதாரமும் முடிவுக்கு வருவதற்கு கொண்டு செல்கின்றன என்று அவர் கூறுகிறார். தனது அவதானம் தொடர்பாக எந்தவொரு உறுதியான ஆதாரத்தையும் அவர் வழங்கியிருக்கவில்லை. 

அவரின் அறிக்கையில் மற்றொரு கேள்விக்குரிய பகுதியாக இருப்பது சித்திரவதையின் கொடூரமான முறைமை பற்றியதாகும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிலரிடமிருந்து தான் கேள்விப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாக அவர் அறிக்கையிட்டிருக்கிறார். பொருத்தமான ஒருங்கிணைப்பு இல்லாமல் கண்டுபிடிப்புகளாக அவர் அவற்றை முன்வைத்திருக்கிறார். இந்த விடயம் நாட்டின் பிரதிமைக்கு அதிகளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். சட்டத்தை அமுலாக்கும் விடயத்தைக் கையாளக் கூடிய நம்பகரமான அரசாங்கம் என்ற முறையில் இது பாதிப்பை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. 
கேள்விக்குரிய ஆதாரத்துக்கான மூலங்கள்


விசேட அறிக்கையாளர் ஜூலை 10 இலிருந்து ஜூலை 14 வரை விஜயம் மேற்கொண்டிருந்தார்.  ஐந்து நாட்களுக்கு மட்டுமாக அவரின் வருகை அமைந்திருந்தது. அவர் வருகை தந்த தினம் மற்றும் புறப்பட்ட தினம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையாயின் இது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட கணிப்பீடாகும். அவரின் நிகழ்ச்சி நிரல் முற்றிலும் கனதியாக அமைந்திருந்தது.பிரதமர் உட்பட ஐந்து அமைச்சர்களையும் ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர் உட்பட 14 சிரேஷ்ட அதிகாரிகளையும் பிரதம நீதியரசர் மற்றும் மூன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்கள் உட்பட நான்கு நீதிபதிகளையும் அவர் சந்தித்திருந்தார். உத்தியோகபூர்வமான தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகளுடன் நீதிபதிகள் மற்றும் ஆணையாளர்களுடனான சந்திப்பு முற்றிலும் சுயாதீனமானதாகும். 


அறிக்கையில் இதர விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.  அவர் கொழும்பில் புதிய மகசின் சிறைச்சாலைக்கும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கும் சென்றிருந்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்போரை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிலரின் நிலைவரம் தொடர்பாகவும் அவர் அவதானிக்கக் கூடியதாக இருந்தது என்று அறிக்கை கூறுகிறது.


அத்துடன் “அவர்களின் சடடத்தரணிகளையும் குடும்பங்களையும் பயங்கரவாதத்துக்கு எதிரான  சட்டமூலத்தின் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களையும் இலங்கையின் கொள்கைகளின் பாதிக்கப்பட்டவர்களையும் அவர் சந்தித்துள்ளார். ஆனால் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கவிலை. இறுதியாக அவர் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களில் ஒருவரையும் சந்தித்துள்ளார். 

சிவில் சமூக உறுப்பினர்களயும் அவர் சந்தித்திருக்கிறார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிந்திய வட்டாரங்களிலிருந்து தொடர்ச்சியான சித்திரவதை பற்றி அவர் தகவலைப் பெற்றுக் கொண்டிருப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளது. அவர் தகவல்களை வழங்கிய வட்டாரங்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை. அது அவருக்குரிய சிறப்புரிமையாக இருக்கக்கூடும்.


சில விபரங்களை அவர் வழங்கியிருக்கின்ற போதிலும் அவை விகிதாசாரமாக உள்ளனவே தவிர இலக்கங்களாக இருக்கவில்லை. உதாரணமாக 2016 இன் பிற்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 80%மானோர் என அறியவருவதாகவும் அது தொடர்பாக விசேட அறிக்கையாளர் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  அவர்களால் சித்திரவதைமற்றும் கைது செய்யப்பட்டதன் பின் உடல் ரீதியாக தவறாக நடத்தப்படுதல் போன்றவை குறித்து முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மனித உரிமைகள் விவகாரத்தில் ஆர்வமுள்ளவர் என்ற முறையில் பொருத்தமான தொகையையாவது அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். 2016 இன் பிற்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எவ்வளவு தொகையினர் கைது செய்யப்பட்டனர்? எவ்வளவு பேர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்? அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தால் அவர்களின் சட்டத்தரணிகள் அதாவது விசேட அறிக்கையாளர் சந்தித்திருந்த அவர்களின் வழக்கறிஞர்கள் தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் அடிப்படை உரிமைகள் வழக்குகளை ஏன் தாக்கல் செய்திருக்கவில்லை.


"எந்தவொரு நபரும் சித்திரவதை அல்லது கொடூரமாக மனிதாபிமானமற்று அல்லது தரக்குறைவாக நடத்தப்படுதல் அல்லது தண்டனைக்குள்ளாக்கப்படுதல் இயலாது என்பதை அரசியலமைப்பின் 11 ஆவது சரத்து மிகவும் தெளிவாகக் கூறுகிறது. இந்த அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடு பற்றி விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டிருக்கவில்லை. 

2016 ஜூலையில் பொலிஸாரினால் சித்திரவதையை இல்லாதொழிக்கும் குழு நியமிக்கப்பட்டிருப்பது குறித்து விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டிருக்கின்ற போதிலும் அந்தக் குழுவை தான் எப்போதாவது சந்தித்தாரா என்பது பற்றி அவர் கூறியிருக்கவில்லை.ஏனைய வட்டாரங்களில் முழுமையாக தங்கியிருக்காமல் நிலைவரம் குறித்த தகவலை அவர் பெற்றுக் கொள்ளக் கூடிய வட்டாரங்களில் ஒன்றாக அது காணப்படுகிறது.


இதேவேளை ஆணைக்குழு முன்னிலையில் முறைப்பாட்டாளர்கள் எவரும் இல்லாமல் விடயங்களை தெரிவிப்பதற்கான பொறுப்பை தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டிருக்கின்றது. இலங்கையில் சித்திரவதை இருந்ததில்லையென  நான் கூறவில்லை. ஆனால் தற்போதைய சூழலை கையாள்கையில் அதிகளவுக்கு நம்பகரமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் அதிகளவுக்கு தகவலை கொண்டதாகவும் இருப்பது அவசியமானதாகும். முரண்பாடு


இந்தக் கட்டுரையில் நான் எடுத்துக் கொண்ட இரண்டாவது விடயமானது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போதான ஒப்புதல் வாக்குமூலங்கள் தொடர்பான விடயமாகும். உத்தேச பயங்கவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசேட அறிக்கையாளர் கொள்கையில் சரியானதாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இந்த விடயத்தில் நீதியமைச்சருக்கும் விசேட அறிக்கையாளருக்குமிடையில் அபிப்பிராயங்கள் காணப்பட்டதாக பல பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை 15 இல் அமைச்சருடன் டெய்லி மெயில் பத்திரிகை தொடர்பு கொண்ட போது “எமர்சன் எந்தவொரு இராஜதந்திர ரீதியான தகைமைகளையோ அடிப்படை நற்பண்புகளையோ கொண்டிருக்கவில்லை.


அவர் இராணுவத் தளபதி ஒருவரைப் போன்ற அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தார்' என்பதாக அமைச்சரின் விளக்கம் அமைந்திருந்தது. இது சரியாக அல்லது தவறாக சில சமயம் இருக்கக்கூடும். எவ்வாறாயினும் அமைச்சரின் போக்கோ அல்லது அவர் செயற்பட்ட விதமோ இராஜதந்திர ரீதியாக தோன்றவில்லை. இலங்கையின் சட்டமுறைமை, தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் சந்தேக நபர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்தல் என்பது தொடர்பாக அவரை விசேட அறிக்கையாளர் கேட்டிருந்தார் என்று அமைச்சர் கூறியுள்ளார். அதேவேளை ஒப்புதல் வாக்குமூலங்கள் பிரிட்டனிலும் ஏற்றுக் கொள்ளப்படுபவை என நான் நினைவூட்டிருந்தேன். ஆதலால் அவர்களின் சட்டங்களை முதலில் அகற்றுமாறு நான் அவரிடம் கோரியிருந்தேன் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். 

இலங்கை தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் போது அதாவது ஐ.நா. வில் கலந்துரையாடும் போது அல்லது மற்றொரு நாட்டின் பிரதிநிதி எவரும் இந்த விடயத்தை ஆராயும் போது குற்றஞ்சாட்டப்பட்ட நபரொருவரின் நாட்டைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்துவது பொருத்தமானது அல்ல. 


"சித்திரவதை மற்றும் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது தவறாக நடத்தப்படுதல் போன்ற பரந்தளவிலான பிரச்சினை நாட்டில் காணப்படுகின்றது. இதேவேளை சர்வதேச மனித உரிமைகள் தரத்தை உறுதிப்படுத்துவதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைக் கொண்டிருக்க முடியும். அதேவேளை சர்வதேச மனித உரிமைகள் தரங்களைக் கொண்டிருப்பதற்கு பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை தடை செய்வது சர்வதேச மனித உரிமைகள் தரத்தைக் கொண்டதாக அமையும் என்று அவர் கூறியிருந்தார்.


வார்த்தை ரீதியாகவோ அல்லது நோக்கத்தைக் கொண்டதாகவோ  இல்லாவிடினும் நீதியமைச்சரின் வாதத்தின் எதிர்மறைத் தன்மையானது சித்திரவதை விடயத்தில் இலங்கையைப் பார்க்க பிரிட்டன் மேம்பட்டதாக இருக்கின்றது என்பதைச் சுட்டுவதாக அமையும். எவ்வாறாயினும் பயங்கரவாத சந்தேக நபர் நீதிபதி முன்னிலையில் சுயவிருப்பில் ஒப்புதல் வாக்குமூலங்களை அளிப்பதற்கான சாத்தியப்பாடு இதில் சேர்க்கப்பட்டிருப்பது அவசியமாகும்.

இதுவே எனது நிலைப்பாடாகும். பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்குமூலங்களை அளிப்பதற்கு பதிலாக நீதிபதிக்கு சுயவிருப்பத்துடன் அதனை அளிப்பது இலங்கையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய விடயமாக காணப்படுகிறது. ஏனென்றால் பயங்கரவாத விசாரணைகளின் போது ஒப்புதல் வாக்குமூலங்களில் சந்தேக நபர்கள் தமது வழக்குகளுக்கு அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியப்பாடும் உள்ளது. எது துரதிர்ஷ்டவசமானது?


விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டிருப்பது போன்று மேற்குறிப்பிட்ட முரண்பாட்டுடன் தொடர்புபட்ட அல்லது தொடர்புபடாத விடயங்கள் பற்றி பார்க்கும் போது "எனக்கு அளிக்கப்பட்ட ஆணை தொடர்பாக காத்திரமான கலந்துரையாடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசாங்கம் அறிவிக்கக்கூடியதாக இருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று அவர் தெரிவித்திருந்தார்.


இப்போது உத்தேச சட்டமூலம் தொடர்பான பிரதான கலந்துரையாடல் ஜெனீவாவிலுள்ள விசேட அறிக்கையாளரின் குழுவினருடனானதாக அமைந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இந்த விடயம் தொடர்பாக "ஏகாதிபத்தியம்' அல்லது "மேற்குலகத் தலையீடு' என ஒருவர் சில சமயம் கண்டிக்கக்கூடும். அதேவேளை அதிகளவுக்கு பாதுகாப்பதற்கான வெளிப்பாடுகள் அல்லது முரண்பாடுகள் இயல்பான சந்தேகங்களுக்கே வழிவகுக்கும். 

Tuesday, July 25, 2017


34 வயது  கறுப்பு ஜூலைக்கு
Bildergebnis für கறுப்பு ஜூலை
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு பல்வேறு விதமான முறைகளில் சிறுபான்மையினமான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இச்சிறிய தீவு 1958,1977,1981 ஆம் ஆண்டுகளில் இனக் கலவரங்களைக் கண்டு மனிதவளம், பொருளாதாரவளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது.

ஆனால், இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால்தான் 1983 ஜூலை மாதம் "கறுப்பு ஜூலை' என்று அழைக்கப்படுகிறது.இதன் அதி உச்சமே இறுதிக்கட்ட யுத்தம் நடந்தேறி இலங்கையில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கியது.

ஆனாலும், இவ்வாறு காலத்திற்கு காலம் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய பல சம்பவங்களில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மறக்க நினைத்தாலும்,  அடி மனதில்  படிந்த சம்பவம் தான் 1983 ஜூலை மாதம் நடந்தேறிய இனக்கலவரம். இவ் இனக்கலவரம் இலங்கையின் தலைநகரில் தமிழர்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கியது.

ஆனால் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொடுத்த வியாக்கியானம்  "உணர்ச்சி வசப்பட்டு சிங்கள மக்கள் ஆவேசத்தில் செய்த காரியம்' என நியாயப்படுத்தி மேலும்  இக்கால கட்டத்தில் " யாழ்ப்பாணத்தவர்களின் எத்தகைய அபிப்பிராயத்தைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை.


அவர்களைப் பற்றி இப்போது நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலையில்லை' என நியாயப்படுத்தியது கண்டு நாகரிக உலகம் தலைகுனிந்தது.

தென் இலங்கை மற்றும் மலையகமெங்கும் தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், வர்த்தக நிலையங்கள்,  கட்டிடங்கள்  தீ பிழம்புகளில் எரிந்து அழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.  

கால், கை  முறிந்த நிலையிலேயே வடக்கு, கிழக்கு தாயகத்திற்கு கப்பல்களில் அனுப்பப்பட்டனர் . தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி சிங்கள இனவாதிகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். 

ஆனாலும் தமிழன் மீண்டும் வந்து தென் இலங்கையில் மீண்டும் எழுந்தான் எனும் வரலாற்று உண்மையை தமிழன் பெருமை கருதி இங்கு குறிப்பிட்டாக வேண்டும் . எமக்குள்ளே பல பெரும் அழிவுசார் குறை பாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் இதுதான் நம் தமிழன் . அழித்தனர் இனவாதிகள். ஆம் தமிழன் மீண்டும் வந்து தென் இலங்கையில் மீண்டும் எழுந்தான் எனும் வரலாற்று உண்மையை இங்கு பதிவு செய்தாக வேண்டும். 


ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் "தார்மிக அரசு' பதவிக்கு 1977 ஆம் ஆண்டு ஜூலை 22 இல் வந்த பின்னர் 1977,1980,1981,1982 இல் வடக்கு, கிழக்கில் அரச படையினரும் மத்திய மலைநாட்டில் சிங்கள வன்முறைக் கும்பலும் தமிழ் மக்கள் மீது வன்முறை வைத்து தாக்குதல் நடத்தி ஒத்திகை பார்த்துவிட்டு 1983 இல் அதனைக் காட்டுமிராண்டித்தனமாக அரங்கேற்றியபோது அகில உலகமும் அதிர்ந்தது. தீதும் நன்றும்  பிறர்தர வாரா :இப்படி ஒரு பேரழிவைச் சந்திக்க ஈழத்தமிழினம் செய்த தவறுதான் என்ன?


தமது வாழ்வில் வளம் சேர்க்க முனைந்தது தவறா? அன்றேல் பெரும்பான்மைச் சமூகத்துடன் இன, மத, மொழி சமத்துவம் கேட்டது தவறா? அல்லது சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கான முடிவுகளைத் தாங்களே மேற்கொள்ள முயன்றது தவறா? அன்றி நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் வராமல் சர்வதேச நியதிகளின்படி தமக்குச் சுயநிர்ணய உரிமை கோரியது தவறா?


1983 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் உள்ள 37 நகர, மாநகர சபைகளுக்குத் தேர்தல்களும் 18 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றன. தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பருத்தித்துறையிலும் சாவகச்சேரியிலும் ஆளும் கட்சி ஐ.தே.க. வேட்பாளர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தமிழர் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாதென தமிழ்த் தீவிரவாத இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டனர்.


தேர்தலின்போது கந்தர்மடம் வாக்குச் சாவடியில் காவலுக்கு நின்ற ஒரு இராணுவ அதிகாரியும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.இவை எல்லாவற்றையும் சிறு, சிறு சம்பவங்களாகவே ஜே.ஆர்.அரசு கணித்தது. இதைவிட சிக்கல்களும் சிரமங்களும் பல மடங்கு அதிகரிக்கப் போகின்றன என்பதை அரசியல் மேதாவி எனக் கருதப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கூட அனுமானிக்க முடியாமலிருந்தது.


1983 ஜூலை 22 ஆம் திகதி கொழும்பில் ஆடிவேல் விழா இரதபவனி. அதைத் தடுத்து நிறுத்துவதா அல்லது வழமைபோல அனுமதிப்பதா என்று தடுமாறிய பொலிஸ் அதிகாரிகள் பலத்த யோசனையுடன் மேலதிகாரிகளின் உத்தரவுடன் ஆடிவேல் விழாவை நடத்தவும் இரத பவனிக்கும் அனுமதியளித்தனர். எனினும் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தென்னிந்தியப் பாடகி திருமதி எம்.எல். வசந்தகுமாரியின் இசைக் கச்சேரியையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் கோயிலின் திறந்த வெளியில் நடத்தத் தடை விதித்தனர்.


அதே தினத்தன்று யாழ்ப்பாண குருநகர் முகாமிலிருந்து இரவு நேர ரோந்துப் பணிக்காக பதினைந்து இராணுவ வீரர்கள் கிளம்பினார்கள். அவர்களது பாதை குருநகர் முகாமிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் நாகவிகாரை, நல்லூர், கோப்பாய், உரும்பிராய், கோண்டாவில், கொக்குவில், கல்வியங்காடு வழியாக மீண்டும் குருநகர் முகாமிற்குத் திரும்புவது.


அன்று பௌர்ணமி தினத்திற்கு முதல் தினம் முழு நிலவு. நல்ல வெளிச்சம். எனவே, 15 படையினரும் அஞ்சாமல் முன்னேறினார்கள். இக்குழுவுக்குத் தலைமை தாங்கியவர் கப்டன் வாஸ் குணவர்த்தன என்பவர்.


உரும்பிராய் சந்தியைக் கடந்து இரு வாகனங்களில் வந்த இராணுவத்தின் திருநெல்வேலிச் சந்தியில் மின்கம்பம் நடுவதற்காக குழிகள் வெட்டப்பட்டுக் கிடந்ததை அவதானித்தார்கள். எனவே இரண்டு வாகனங்களும் மெதுவாக நகரத் தொடங்கின. அப்போதுதான் அந்த அனர்த்தம் நடந்தேறியது. இரண்டு வாகனங்களும் நிலக்கண்ணிவெடியில் சிக்கிச் சிதறுண்டன.அதேநேரத்தில் துப்பாக்கி வேட்டுகளும் எல்லாப் பக்கங்களிலுமிருந்து சரமாரியாக வாகனத்தில் வந்தோரைத் தாக்கின. பதின்மூன்று இராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே மரணமானார்கள். அஙு4889 என்ற ஜீப் வண்டியும் 26 ஸ்ரீ 3193 என்ற ட்ரக் வண்டியும் நிலக்கண்ணிவெடியில் சிக்கிச் சிதலமாகியது. உயிர் தப்பியோர் இருவர் மட்டுமே!


அந்த இருவரில் இரண்டு கால்களிலும் குண்டடிபட்ட ஆர்.ஏ.யு.பெரேரா என்பவர் இரண்டு கிலோமீற்றர் தூரத்தை சிரமப்பட்டுக் கடந்து கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு வந்து குருநகர் முகாமிற்கு தகவல் தந்தபோது நேரம் இரவு ஒரு மணி. பின்னர் பெரேராவிற்கு பதவி உயர்வு கிடைத்தது என்பது பிறிதொரு விடயம். இந்த அனர்த்தத்தில் உயிர் தப்பிய மற்றொருவர் ஐ.எச்.சுமதிபால என்பவர் ஆவார்.அப்போதைய குருநகர் இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் பிரிகேடியர் பல்த்சார், இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர் இராணுவத் தளபதிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனரல் சேபால ஆட்டிகல, படைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன.படுகொலைகள் பதின்மூன்று நடைபெற்ற அடுத்தநாள் 23.07.1983 ஞாயிற்றுக்கிழமை போயா தினம்.


படைகளின் தலைமைத் தளபதி ஜனாதிபதிக்கு சேபால ஆட்டிகல அதிகாலை கூறிய அதிர்ச்சி செய்தி படுகொலைகள் பதின்மூன்று பற்றியதுதான். அதிர்ச்சியடைந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. ஜே.ஆர். சாணக்கியவாதியல்லவா? உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைத்து 13 இடங்களில் இறுதிக் கிரியைகள் நடந்தால் 13 இடங்களில் கலவரம் ஏற்படலாம். எனவே, யாழ்ப்பாணத்திலேயே புதைத்துவிடும்படி திஸ்ஸ வீரதுங்கவிடம் சொல்லுங்கள் என ஆட்டிகலவைப் பணித்தார்.

ஜெனரல் சேபால ஆட்டிகல இச்செய்தியை இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவிடம் தெரிவித்தபொழுது திஸ்ஸ இந்த முடிவிற்கு சம்மதிக்கவில்லை. அப்படிச் செய்வது சிங்கள இனப் பெருமைக்கு இழுக்கு எனக் கூறி மறுத்துவிட்டார்.

இக்கருத்து ஜே.ஆரிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர் முப்படைத் தளபதிகள், அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கொழும்பில் பாதுகாப்பு பலமாக இருப்பதாகவும் 13 இடங்களுக்கும் 13 சடலங்களை அனுப்பும்போது இனக்கலவரம் ஏற்படும் சாத்தியம் அதிகமுண்டு எனவும் எனவே ஒரே நேரத்தில் 13 சடலங்களையும் கொழும்புக்கு எடுத்துவந்து கனத்தை மயானத்தில் சகல இராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்வதே சாலச் சிறந்தது எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு அவ்வாறே இறுதி முடிவும் எடுக்கப்பட்டது.


ஜே.ஆரின் இந்த முடிவு யாழ்ப்பாணத்திலிருந்த திஸ்ஸ வீரதுங்கவிற்கு ஆட்டிகல சேபாலவால் தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு பிற்பகல் 2 மணிக்குள் சடலங்களை கனத்தை மயானத்திற்குக் கொண்டு வருவதெனவும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கூடியிருக்க பொழுது சாய்வதற்கு முன்னர் அடக்கம் செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.


13 இறந்த வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் ஞாயிறு நண்பகலுக்குள் கனத்தை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைத் தவிர, கொலையுண்டவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களும் ஏராளமாய்த் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தோடு கூட்டமாக சமூக விரோதச் சக்திகளும் கலந்துவிட்டன.பொழுது சாய்ந்ததும் பகலவன் மறைந்த பின்னரும் சடலங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கனத்தைக்கு வந்து சேரவில்லை. காரணம் சிதைந்திருந்த சடலங்களை பலாலியில் பதப்படுத்தும் வசதியில்லை. சிதைந்து சின்னாபின்னமான உடலுறுப்புகளை இனங்கண்டு பொலித்தீன் பைகளில் அடைப்பது சிரமமாக இருந்தது. பின்னர் சடலங்கள் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பனாகொடை இராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டன.


அதேசமயம், கனத்தை மயானத்தில் பதற்றம் ஏற்பட்டதால் சடலங்கள் கனத்தைக்குக் கொண்டுவரப்படமாட்டா, தயவுசெய்து அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என இராணுவம் தொடர்ச்சியாக இடைவிடாமல் அறிவித்துக் கொண்டிருந்தது. எனினும், சனக்கூட்டம் கலைந்தபாடில்லை.


இதற்கிடையில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஒரே இரவில் எங்கே சடலங்கள், எங்கே புதைத்தார்கள் ? என்பது அறியாமலே தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, கடைகள் கொளுத்தப்பட்டன, தமிழ் மக்கள் வயது வித்தியாசமின்றி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். கொழும்பில் பரவிய கலவரம் எங்கும் பரவத் தொடங்கியது.


தவிர, காலி முகத்திடலில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் வைத்து வழியில் எங்கும் சவப்பெட்டிகளைத் திறந்து பார்க்கக்கூடாது என்ற உத்தரவுடன் 13 இராணுவ வீரர்களின் சடலங்களும் திங்கட்கிழமை காலை அதாவது ஜூலை 24 ஆம் திகதி காலை அவர் தம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


அவ்வாறிருக்க ஞாயிறு இரவே இனக்கலவரம் நாடு பூராவும் பரவியது.  தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை, திருட்டுகளை, சூறையாடல்களைக் கட்டவிழ்த்து விட்டது யார்? ஆயிரக்கணக்கான தமிழரை நிர்க்கதியாக்கிய திரை மறைவுச் சக்தி எது?


சர்வசக்தி படைத்த அன்றைய ஜனாதிபதியால் இவற்றை நிறுத்த முடியாமல் போனது ஏன்? விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய திருநெல்வேலி சந்தி ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச் சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.


எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்துவிட்டார்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் என்றம் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.


இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாக தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. 400 தொடக்கம் 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக, சிறைச்சாலை படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.


பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.


இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் உண்மை இன்றளவும் இருக்கின்றன.


அரசாங்கக் கட்டிடங்கள் , ஆலயங்களில் தமிழ் மக்கள் தஞ்சமடைந்தனர். மனிதாபிமானமுள்ள சில சிங்கள, முஸ்லிம் மக்கள் அச் சமயங்களில் தமிழ் மக்களுக்கு  புகலிடம் அளித்திருந்தனர். 1983 ஜூலை 24 இல் ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசாங்கம் அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்திய போதும் அதனை அமுல்படுத்த பொலிஸ் தரப்பு விருப்பற்று இருந்தது. இந்தக் கலவரம் இடம்பெறுவதற்கு முன்பாகவே இனங்கள் மத்தியிலான பதற்றம் அதிகரித்திருந்தது.  இனக் கலவரத்தையடுத்து பெருந்தொகையான தமிழ் மக்கள் அண்டை நாடான இந்தியாவுக்கும்  கனடா, அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளுக்கும் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.


தலைநகர் கொழும்பில் மாத்திரம் 20 ஆயிரம் தமிழர்கள் வீடுகளை இழந்ததாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவற்றை விட தென்னிலங்கை நகரங்களில்  வசித்த தமிழர்கள்  மீதும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்றன.  இக்கலவரத்தில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 300 என்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தபோதிலும் பல்வேறு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், சர்வதேச முகவரமைப்புகள் 3000 பேர் வரை பலியாகியிருக்கலாமென தெரிவித்திருந்தன. 


சர்வதேசத்தின் குறிப்பாக இந்தியாவின் கடும் அழுத்தத்தையடுத்தே படிப்படியாக நிறுத்தப்பட்டது. தன் சொந்த நாட்டு மக்களைப் பற்றியும் அவர்கள் கொல்லப்படுவதைப் பற்றியும் ஓர் இனமே அழிக்கப்படுவதைப் பற்றியும் அந்த நாட்டின் ஜனாதிபதி கவலைப்படவில்லை. ஆனால் அந்த நாட்டின் இறையாண்மை பற்றியும் அந்த நாடு உடைந்துவிடக்கூடாது என்பது பற்றியும் இங்கு எவ்வளவு பேர் கவலைப்படுகிறார்கள். 1983 இல் நடந்தது வெறும் கலவரம் அன்று.


அது உள்நாட்டுப் போரின் தொடக்கம். இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் ஏற்பட்டுவிட்ட முடிவு. அன்று சிறையில் சிதறி விழுந்தவை குட்டிமணியின் கண்கள் அல்ல. தமிழ்த் தேசியத்தின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கம். ஒருவார காலத்துக்கும் மேலாக நீடித்த கலவரம்  சர்வதேசத்தின் குறிப்பாக இந்தியாவின் கடும் அழுத்தத்தையடுத்தே படிப்படியாக நிறுத்தப்பட்டது. 

இனக் கலவரத்தினால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஒருபுறமிருக்க ஏனையோர் தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடமான வட, கிழக்கையே நாடிச் சென்றனர். நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ்  மக்கள்மீது  கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையாகவே இந்த 1983 ஜூலை கலவரம் கருதப்படுகிறது. "கறுப்பு ஜூலை' வட, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்ந்த தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியது.


இலட்சக்கணக்கான தமிழர்கள் இந்தியாவுக்கு சென்றதைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக இந்தியா தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறும் ஏற்பட்டது. மறுபுறம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. 

பண்பட்ட மனிதாபிமானமிக்க சிங்களவர், தமிழர்களை காப்பாற்றியிருக்கின்ற சம்பவங்கள் நிறையவே உண்டு.  1983 இனக்கலவரத்தில் தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள். பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினார்கள். தமிழ்த் தலைவர் செல்வநாயகத்தின் மகனை  காப்பாற்றி விமான நிலையம் சென்று இந்தியாவிற்கு அனுப்பிவைத்தவரே ஒரு சிங்களத்தலைவர்தான். ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது.83 ஜூலை இனக்கலவரம் பல நிகழ்வுகளை மாற்றிப் போட்டது. ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான 

சிங்களவர்கள் மேல், சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்து சந்தேகம் கொள்ள தலைப்பட்டனர். இந்த நாட்டிலே இனங்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது.இக்கலவரத்திற்கு பின் பல்வேறு துன்பியல் சம்பவங்கள் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றதை அனைவரும் கண்கூடாக உணர்ந்துள்ளார்கள் .


 1983களில் இலங்கையில் பொருளாதாரத்தில் தமிழர்களும் பிரதான பங்கு வகித்திருந்தார்கள். தலைநகரின் வர்த்தகத்தில் தமிழ் வர்த்தகர்கள் தான் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆனால், திட்டமிட்டு நிகழ்ந்தேறிய இனக்கலவரத்தால் தமிழ் வர்த்தகர்களின் கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. அதே நிலை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முளைத்துள்ளது எனலாம். இலங்கைத் தலைநகரில் தலைநிமிர்ந்து மிடுக்காக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இதனை பொறுக்கமுடியாத சிங்கள இனவாதத்தின் கோரத்தாண்டவமே 1983 ஜூலைக் கலவரமாக உருவாகியிருந்தது. 


இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன்று இலங்கையின் பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் முஸ்லிம்களின் பங்கும் பிரதானமாக காணப்படுகிறது. அதனை அடக்குவதற்காக அண்மையில் அழுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில் பகிரங்கமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிடலாம். இந்தச் சம்பவங்கள் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை நாட்டு மக்கள் அனைவருக்கும் நினைவுபடுத்திச் சென்றுள்ளது. 


மகாகவி கண்ட கனவு 


ஆனால் 1983 ஜூலை கலவரம் தமிழ் மக்கள் மத்தியில் முதலில் பாதுகாப்பான, நிம்மதியான வாழ்வினை கருத்திற் கொண்டு மேற்கு உலகிற்கு  செல்லவேண்டிய  புலம்பெயர்வு எண்ணத்தை வலுவாக  ஏற்படுத்தியதால் இன்று அதை மகாகவி கண்ட கனவு போல் பார்க்கின்றோம் . இந்த நிலையை அடைவதற்கும் அந்நாடுகளில் ஆரம்பத்தில் அவன் செய்த தியாகமும் சகிப்புத் தன்மையும் விடாமுயற்சியுமே காரணமாயிற்று என்பதை நாம் முன்நிறுத்திப் பார்க்கவேண்டும். 


சிங்கள மக்களின் சிந்தனையிலும்  இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது  . 34 ஆண்டுகளுக்குப் பின்பும்  இதனை நினைவுகூரி ஒரு  நிகழ்வை  ஐக்கிய சோஷலிச கட்சித்  தலைவர் எமது அரசியல் நண்பர்  சிறிதுங்க ஜயசூரிய கொழும்பு தேசிய நூலக சேவைகள் சபை  கேட்போர் கூடத்தில் 27 ஆம் திகதி வியாழன் 3.30 மணிக்கு ஆரம்பிக்கும் வகையில்    ஏற்பாடு செய்திருக்கின்றார்.

Friday, July 21, 2017

செம்மொழி   நிலைக்கட்டும்
Bildergebnis für செம்மொழி
மொழிகளிலே தமிழ்மொழி தொன்மையானது, சிறப்பானது. இந்தியப் பண்பாட்டில் தமிழர்களின் பண்பாட்டுப் பங்கு அதிகம். இப்படி சிறப்பு வாய்ந்த மொழியை மற்ற மாநிலத்தவரும் அறியாமல் இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. தமிழினை, தமிழ்ப் பண்பாட்டினை பிற மாநிலங்களும் புரிந்து கொள்ளவும், அறிந்துகொள்ளவும் வேண்டும். இதற்கு மாநிலங்களிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றினார்.

இந்த உரையைக் கேட்டு மகிழ்வான மனநிலையில் இருந்த தமிழர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் அதிர்ச்சியளித்தது. இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், தன்னாட்சி நிறுவனமாக 2008 இல் தொடங்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை (Central Institute of Classical Tamil)  திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக மாற்றும் நடுவண் அரசின் திட்டம்!


தமிழ்மொழியை நடுவண் அரசு செம்மொழியாக அறிவித்த உடனே ஏற்பட்ட பலன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil). தமிழ்மொழியின் மேம்பாட்டிற்கும், உலக அரங்கில் தமிழ்மொழியின் சிறப்புகளைப் பரப்புவதற்கும் உயர் ஆய்வுகளை விரிவுபடுத்துவதற்கும் 2006 இல் நடுவண் அரசால் தன்னாட்சி நிறுவனமாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.


தொடக்க நிலையில் இந்த நிறுவனம் மைசூரில் உள்ள "இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (Central Institute of Indian Language)  இயங்கியது. இந்திய மொழிகளுக்காக தொடங்கப்பட்ட நிறுவனம் அது. தமிழ் செம்மொழித் தகுதிப்பாடு உடையது என்பதற்கான தக்க சான்றுகளுடன் நடுவண் அரசுக்கு, திட்டமுன்மொழிவை அந்த நிறுவனமே வழங்கியது.


அந்த நிறுவனத்தில் கல்விசார் நிலையில் உயரிய பொறுப்புகளில் அப்போது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகம் இருந்தனர். அதன் காரணமாக செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அங்கு செயல்பட்டது. இருப்பினும் வேறு ஒரு நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்குவது, அதன் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையாது என்பதால் அது 2008 இல் சென்னைக்கு இடம் மாற்றப்பட்டது.


சென்னையில் கடற்கரைச் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிறிது காலம் இயங்கியது. அதன்பின்னர் தற்போது தலைமைச் செயலகம் உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து தரமணிக்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக சென்னை பெரும்பாக்கத்தில் நடுவண் அரசின் பொதுப்பணித் துறையின் வாயிலாக தனி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில்தான் நடுவண் அரசின் "நீதி ஆயோக்' இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்து மற்ற மொழிகளுக்கான நிறுவனங்களை எல்லாம் அந்த அந்த மாநிலங்களில் செயல்படும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு மையமாக இணைத்துவிடலாம் என்று அண்மையில் ஆலோசனை கூறியுள்ளது.


அதன் அடிப்படையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைப்பது தொடர்பாக அப்பல்கலைக்கழகத்திற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதம் தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் ஆளுகைக் குழுவில் விவாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உருப்பெற்று மூன்றாண்டு கழிந்த பின்னர் 2009 இல்தான் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களுமே ஆளுகை நிலையில் தன்னாட்சித் தன்மை கொண்டு, நடுவண் அரசின் நிதியுதவியோடு செயல்படுகின்றன.


சற்று நுட்பமாகப் பார்த்தால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல்கலைக்கழக நிலையில் இருந்து மேம்பட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன (National Importants)  நிலை கொண்டது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகமே செம்மொழி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் உதவியோடு 20-12-2013 கல்வியாண்டில் எம்.ஏ., செம்மொழித் தமிழ் என்ற பாடத்தினை அறிமுகப்படுத்தி நடத்தி வருவதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.


எந்த ஒரு நிறுவனமும் தனித்தன்மையுடன் தன்னாட்சியுடனும் செயல்படுகின்றபோதுதான், அது தொடங்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்ற முடியும்.


இந்த நிலையில் செம்மொழி நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைக்கின்றபோது, அது தன் தனித்தன்மையை இழப்பதோடு மட்டுமல்லாது பல்கலைக்கழக மரபார்ந்த பணிகளில் ஈடுபட்டு அது சிதைவுறவும் வாய்ப்பு உள்ளது.
1970 இல் பாரிஸில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவில் தனிநாயக அடிகளார் தீவிரமாக முன் வைத்த ஆலோசனையின் பேரில்தான் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) அதே 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணா "இந்த நிறுவனம் பட்டங்கள் வழங்கும் கல்வி நிலையமாக ஆகிவிடலாகாது' என்று கூறினார். இதன்வழி செயல்படத் தவறி இன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பயிற்றுவித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைவுடன் பட்டம் வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாகவே சுருங்கிவிட்டதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.


இதேபோன்ற ஒரு நிலைக்கு செம்மொழி நிறுவனம் தள்ளப்பட்டுவிடக் கூடாது.
இந்திய அளவில் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (UGC) நிதியுதவியுடன் மொழிக்காக ஆறு மத்திய பல்கலைக்கழகங்கள் தற்போது செயல்படுகின்றன. சமஸ்கிருத மொழிக்காக மூன்று பல்கலைக்கழகங்கள் அதாவது, ஸ்ரீலால் பகதூர்சாஸ்திரி ராஷ்ட்ரீய சமஸ்கிருத வித்யபீடம்  புதுடில்லி, ராஷ்ட்ரீய சமஸ்கிருத சன்ஸ்தான்  புதுடில்லி, ராஷ்ட்ரீய சமஸ்கிருத வித்யபீடம்  திருப்பதி ஆகியவை.


இதேபோன்று இந்தி மொழிக்காக வார்தாவில் மகாத்மா காந்தி அந்தராஷ்ட்ரீய இந்தி விஸ்வ வித்யாலயா, உருதுமொழிக்காக கௌகாத்தியில் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகளுக்கான பல்கலைக்கழகம் ஆகியவை செயல்படுகின்றன.


இந்த நிலைக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை தரம் மேம்படுத்தி, அடையாளப்படுத்த வேண்டுமே தவிர அதன் அடையாளத்தை சிதைக்க முயலக் கூடாது.


நடுவண் அரசின் ஆளுகையின் கீழ், மொழி, இலக்கிய மேம்பாட்டிற்காக சில நிறுவனங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக சாகித்ய அகாடமி, இந்திய தேசியப் புத்தக நிறுவனம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் போன்றவை.
இந்த நிறுவனங்கள் எல்லாம் அவை தொடங்கப் பெற்ற நோக்கத்தினை இடையூறு இன்றி நிறைவேற்ற அனுமதிக்கின்றபோது, இதேபோன்று தனித்தன்மை கொண்ட மொழி சார்ந்த செம்மொழி நிறுவனத்தினை மட்டும் மடைமாற்றம் செய்ய முயல்வது ஏன்?


இந்த நிறுவனம் தொடங்கப்பெற்ற 2006 ஆம் ஆண்டு முதல் அதாவது பதினொரு ஆண்டுகள் இதற்கு என்று முழுநேர இயக்குநர் இல்லை. நடுவண் அரசின் கல்வி நிறுவனங்களில் இருந்து ஒருவரை கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கின்றனர். அதனால் இதன் செயல்பாடுகளில் தேக்கம் ஏற்படுகிறது.


உலகளாவிய நிலையில் சிறப்புற்றுத் திகழும் வல்லுநர்களையும், பேராசிரியர்களையும் அழைத்துப் பணியமர்த்துவதுடன் இதன் ஆளுகைக் குழுவிலும் அவர்கள் இடம் பெற வகை செய்ய வேண்டும். நிறுவனத்தின் ஆளுகை உறுப்பினர்களை உடனே நியமித்து, ஆளுகைக் குழு கூடி அடுத்த பத்தாண்டுகளுக்கு தொலைநோக்குத் திட்டம் தயாரித்து (Vision Document) அதை நடைமுறைப்படுத்த முயலவும் வேண்டும்.


நடுவண் அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதி நல்கையைத் தொடர்ந்து முயன்று பெறுவதிலும், பெறப்பட்ட நல்கையை முழுமையாகப் பயன்படுத்தி பயனுள்ள திட்டப் பணிகளை தொய்வின்றித் தொடர்வதிலும் செம்மொழி நிறுவனம் இனித் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அறிஞர்களின் எதிர்பார்ப்பு.


1906 இல் "மதுரை தமிழ்ச் சங்கம்' ஒரு பல்கலைக்கழகமாக மலர வேண்டும் என மகாகவி பாரதியார் விரும்பினார். 1925 - 1926 இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்ற வேட்கை தீவிரமானது என்றாலும் 1981 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில்தான் தஞ்சையில் அது தொடங்கப்பெற்றது.


இதே காலகட்டத்தில் அதாவது 1981 இல் மதுரையில் 5 ஆவது உலகத் தமிழ்மாநாடு நடைபெற்றபோது தமிழ் அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்பட மதுரையில் ‘உலகத் தமிழ்ச் சங்கம்‘ ஏற்படுத்தப்படும் என அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அறிவித்து 1986 இல் தொடங்கியும் வைத்தார். ஆனால் 2012 இல்தான் அதற்கு மதுரை தல்லாகுளத்தில் வளாகம் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


நம்முடைய இப்போதைய தேவை உலகளாவிய நிலையில் உள்ள புலமைகளின் இணைப்பும் உறுதிப்பாடும்தான். அந்த நிலையை இந்த நிறுவனங்கள் எய்தி இருந்தால் இந்த இடர்பாடு நேர்ந்திருக்காது. இதனை சீர் செய்வது அந்த அந்த நிறுவனங்களின் கடமை.


அதேவேளை உலகம் முழுவதுவும் உள்ள தமிழர்களின் உணர்வுகளை, மரபுகளை, மதித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை அதே தன்னாட்சி ஆளுகை நிலையில் நிலைநிறுத்தி, நீடிக்கச் செய்வதுடன் மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுக்கச் செய்வது நடுவண் அரசின் தார்மிகக் கடமை!
பொதுமக்களுடனான கருத்தறியும் குழுவின் தலைவர் ....
Bildergebnis für ?
2015 ஜனவரி 8 இல் முன்னைய ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுவதற்காக அவர்கள் வாக்களித்தனர்.  வடக்கிலும் தெற்கிலுமுள்ள மக்களினால் அந்த உறுதிமொழிக்கு அங்கீகாரமளிக்கப்பட்டிருந்தது என்று  அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறியுள்ளார்.


கேள்வி: நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படவில்லையென சிலர் கூறுகின்றனர்.  இந்தத் தருணத்தில் புதிய அரசியலமைப்புக்கான தேவைப்பாடு குறித்து நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: அண்மைக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் புதிய அரசியலமைப்புக்கான தேவையை முன்னிறுத்துகின்றன. 1978 அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட உடனடியாகவே அதனைத் திருத்த வேண்டும் என்ற பாரியளவு வலியுறுத்தல்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதனை எவரும் மறக்கவில்லை. அரசியலமைப்பை திருத்துவதற்கான உறுதிமொழியையே ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அளித்திருந்தார்.
ஆயினும், இரு தடவைகள் அவர் அதிகாரத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தும் அதனை மேற்கொண்டிருக்கவில்லை. எதேச்சாதிகாரத்துக்கு எதிரானதாகவே அந்தக் கோரிக்கை அமைந்திருந்தது. அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் உறுதியளித்திருந்தார்.
அவரும் இரு தடவைகள் அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அதனைச் செய்திருக்கவில்லை. தனது வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமன்றி 18 ஆவது திருத்தத்தினூடாக நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைக்கும் அவர் சென்றிருந்தார். சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை அவர் எடுத்திருந்தார்.

சட்டமா அதிபர் திணைக்களமும் ஜனாதிபதியினால் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடக்கூடிய வேட்பாளரின் வரையறையும் அகற்றப்பட்டிருந்தது. 18 ஆவது திருத்தம் ஜனாதிபதி ஒருவருக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியிருந்தது. அந்த அதிகாரத்துக்கு எதிரான குரல் பரந்தளவிலான தன்மையை கொண்டிருந்தது. 

கேள்வி: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைளை நீக்குவதற்காக மட்டும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் எமக்கு தேவைப்படுகின்றனவா?
பதில்: சட்டமும் ஒழுங்கும் கடந்த தசாப்த காலமாக சீர்குலைந்துள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் மரங்களில் கட்டி வைக்கப்பட்டனர். பொலிஸ் காவலில் சுமார் 100 சந்தேக நபர்கள் மரணமடைந்திருந்தனர். நீதிமன்றங்களில் எந்த வழக்குகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஊடகங்கள் மீது தாக்குதல் இடம்பெற்றிருந்தது. பயத்தினால் அரசாங்கத்தை அவர்கள் விமர்சித்திருக்கவில்லை.

குறைந்தது ஆயுதம் தரிக்காத 20 கைதிகள் கொல்லப்பட்டனர்.இந்த விடயங்கள் எவையும் கவனத்துக்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை. அரசியலமைப்பானது அரசாங்கத்தின் அதிகாரங்களிலிருந்தும் மக்களை பாதுகாப்பதற்கான கருவியாக இருக்கின்றது. அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்கமும் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை அரசியலமைப்பு வரையறைப்படுத்துகின்றது. மக்கள் உரிமைகள் அரசியலமைப்பில் பாதுகாக்கப்படுகின்றன. அரசியலமைப்பை எம்மால் மீற முடியாது.

அந்த அரசியலமைப்பு மக்களுக்கு உதவியாக இல்லை என்பதை நாங்கள் பார்த்தோம்.  அதனாலேயே 2015 ஜனவரி 8 இல் கடந்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என அவர்கள் நம்பியிருந்தனர். ஜனநாயகம் மீள நிலைநிறுத்தப்படுமென  அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். தெற்கைப் போன்று வடக்கிலுள்ள மக்களினாலும் அந்த உறுதிமொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. நாங்கள் அதனை புரிந்து கொள்வது அவசியம். மக்கள் தேசிய நல்லிணக்கத்திற்காக வாக்களித்திருந்தனர். 

கேள்வி: நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை திருத்துவதன் மூலம் அந்த இலக்கை எம்மால் வென்றெடுக்க முடியாதா?
பதில்: இல்லை, எம்மால் முடியாது. இந்த அரசியலமைப்பின் கீழ் சகலதுமே சீர்குலைந்துள்ளன. பிரதம நீதியரசர் குற்றவியல் பிரேரணைக்குள் உட்படுத்தப்பட்ட விதமானது நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை என்பதை காண்பித்தது. உயர் நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் தீர்ப்புகள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

விமல் வீரவன்ச போன்றவர்களின் விருப்பத்திற்கு அமைய பிரதம நீதியரசருக்கு எதிரான வழக்கை நீதிபதிகள் விசாரித்திருந்தனர். புதிய அரசியலமைப்பானது அது தொடர்பாக மாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு உள்ளது. அரசியலமைப்பை திருத்துவதனால் நாட்டை ஜனநாயகப்படுத்தவோ அல்லது நல்லிணக்கத்தை கொண்டுவரவோ முடியாது.

சுதந்திரம் பெற்று 69 வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்ப நாங்கள் தவறிவிட்டோம். அதற்காக புதிய அரசியலமைப்பு எமக்கு தேவைப்படுகிறது 1948, 1972, 1978 களில் அரசியலமைப்புகள் வரையப்பட்டன. அதற்கு மக்களின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை.  நாங்கள் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னர் பொதுமக்களுடன் கலந்துரையாடுவதும் அவர்களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்வதும் அவசியமானதாகும்.

கேள்வி: புதிய அரசியலமைப்பை வரைவதற்கு அரசாங்கத்திடம் 2/3 பெரும்பான்மை இல்லை என சிலர் வாதிடுகின்றனரே?
பதில்: பகிரங்கமாக அரசியலமைப்பு வரையப்பட்டுள்ளது.  நாங்கள் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டியுள்ளது.  அவர்கள் விரும்பாவிடில் மக்கள் அதனை நிராகரித்து விடுவார்கள். நாங்கள் வெவ்வேறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கின்றோம். அவற்றை பரிசீலிப்பது அவசியமாகும். இறுதியில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவது அவசியமாகும். 2/3 பெரும்பான்மையுடன் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டும்.  மக்களின் இறைமை தொடர்பாக இந்த விடயத்தில் நாங்கள் அச்சப்படக்கூடாது. 2015 மார்ச் 16 இல் 225 எம்.பி.க்கள் கொண்ட சபையை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றுவதற்கு பாராளுமன்றம் ஏகமனதாக தீர்மானித்தது. அதற்கு எதிரானவர்கள் என இப்போது சிலர் கூறுகின்ற போதிலும் அச்சமயம் யாவருமே இதற்கு இணக்கத்தை தெரிவித்திருந்தனர்.

அரசியலமைப்பு பேரவை அனைத்துக் கட்சி செயற்பாட்டு குழுவை நியமித்திருந்தது. 20 எம்.பி.க்களுடன் அரசியலமைப்பை வரைவதற்கு அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அதற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார். பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆர்.சம்பந்தன் ஆகியோரும் இதில் இடம்பெற்றிருந்தனர். விடயங்களை ஆய்வு செய்வதென செயற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. அதற்காக ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

நிதிக் குழுவின் தலைவராக பந்துல குணவர்தன இருக்கின்றார். வெளியே வேறுபட்ட கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தினாலும் சகல கட்சிகளும் இந்த நடவடிக்கைகளில் இணைந்துள்ளன. ஆறு குழுக்களும் ஆறு சிறந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. தற்போது அவை தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.  குறிப்பிட்ட சில விடயங்களில் கருத்தொருமைப்பாடு உள்ளது. ஆனால், அவை யாவும் செம்மையாக இருக்கவில்லை. சகல கட்சிகளுடனும் கலந்தாலோசிக்கப்படுகின்றன.

கேள்வி: லால் விஜேநாயக்கவினால் தலைமை தாங்கும் குழுவானது இலங்கை மதச்சார்பற்ற அரசாக இருக்கின்றது என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
பதில்: மதச்சார்பற்ற அரசு தொடர்பான தீர்மானம் குறித்து எவரும் தீர்மானமொன்றை எடுத்திருக்கவில்லை. ஆனால், அரசியலமைப்பின் சரத்து 9 ஐ திருத்துவதில்லையென ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளனர். சரத்து 9 பௌத்தத்துக்கு முன்னுரிமையை வழங்குகின்றது.

அரசு மதச் சார்பற்றதாக இருக்க வேண்டுமென சிலர் கூறுகின்றனர். அத்தகைய கருத்துகளும் பரிசீலனைக்கு எடுக்கப்படுவது அவசியமாகும். ஆனால், அந்த மாதிரியான எண்ணப்பாட்டை வெளிப்படுத்துதல் அந்த விடயம் ஏற்கனவே அமுல்படுத்தப்படுகின்றது என்று அர்த்தப்படுவதாக அமைந்துவிடாது.

கேள்வி: 3 நிக்காயாக்களின் பௌத்த பிக்குகளும் மாநாட்டை நடத்தி நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனரே?
பதில்: மகாநாயக்க தேரர்களின் கருத்தும் பரிசீலனைக்கு எடுக்கப்படுவது அவசியமாகும். தாங்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பது பற்றி கூறுவதற்கான சுதந்திரத்தை அவர்கள் கொண்டுள்ளனர். ஆனால், மக்களே இறைமை கொண்டுள்ளனர். ஆட்சியானது அதனை அடிப்படையாகக் கொண்டதாகும். தனிப்பட்டவர்கள் அல்லது குழுவினரைக் கொண்டதாக இறைமை அமைந்திருக்கவில்லை. அறிக்கையானது முக்கியமானதாகும்.

ஏனெனில், தலைமை பிக்குகளினால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அதனை ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் கலந்துரையாடியிருக்க முடியும். அவர்களின் அறிக்கை ஊடகங்களின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அரசியல்வாதிகளில் பலர் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர். அரசியலமைப்பின் சரத்து 8 தொடர்ந்து இருக்க வேண்டுமென அவர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்களுடன் கலந்துரையாடிய பின்பே அரசியலமைப்பு நகல்வரைபாக தயாரிக்கப்படும். முதலாவது நகல் வரைபு செயற்பாட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அந்த அறிக்கை பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும். அது தொடர்பாக அச்சப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
கேள்வி: பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் அங்கமாக விளங்கும் நீங்கள் அரசாங்கம் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பது போன்ற புரட்சிகரமான யோசனைகளை குறிப்பிட்டிருக்கவில்லையா?
பதில்: பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் இலக்கானது மக்களை சந்தித்து அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக அவர்களின் கருத்துகளைப் பெற்றுக் கொள்வதாகும். பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரைகளுடன் செயற்பாட்டுக் குழுவிற்கு அவர்கள் இதனை அறிவிப்பார்கள்.

20 விடயங்களில் பொதுமக்கள் அபிப்பிராயத்தை நாங்கள் நாடியிருந்தோம்.  எமது பரிந்துரைகளுடன் பொதுமக்களின் கருத்துகளை ஒன்றிணைத்து நாங்கள் முன்வைத்திருந்தோம். ஆயினும் குழுவின் உறுப்பினர்கள் யாவருமே இதுவரையும் இணக்கப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டுமென சிலர் அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போதைய சூழல் பெரும்பான்மையானோர் கருத்தானது அது தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடாக உள்ளது.  இந்த விடயம் குறித்து அரசியலமைப்பு பேரவை கவனத்திற்கு எடுக்கக்கூடும். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் அங்கீகாரம் வழங்காவிடில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறாது. பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்பும் குறிக்கோளுடன் எமது அறிக்கையை குறிப்பிட்ட சில ஆட்கள் தவறாக மேற்கோள் காட்டுகின்றனர்.