Friday, July 21, 2017

பொதுமக்களுடனான கருத்தறியும் குழுவின் தலைவர் ....
Bildergebnis für ?
2015 ஜனவரி 8 இல் முன்னைய ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுவதற்காக அவர்கள் வாக்களித்தனர்.  வடக்கிலும் தெற்கிலுமுள்ள மக்களினால் அந்த உறுதிமொழிக்கு அங்கீகாரமளிக்கப்பட்டிருந்தது என்று  அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறியுள்ளார்.


கேள்வி: நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படவில்லையென சிலர் கூறுகின்றனர்.  இந்தத் தருணத்தில் புதிய அரசியலமைப்புக்கான தேவைப்பாடு குறித்து நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: அண்மைக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் புதிய அரசியலமைப்புக்கான தேவையை முன்னிறுத்துகின்றன. 1978 அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட உடனடியாகவே அதனைத் திருத்த வேண்டும் என்ற பாரியளவு வலியுறுத்தல்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதனை எவரும் மறக்கவில்லை. அரசியலமைப்பை திருத்துவதற்கான உறுதிமொழியையே ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அளித்திருந்தார்.
ஆயினும், இரு தடவைகள் அவர் அதிகாரத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தும் அதனை மேற்கொண்டிருக்கவில்லை. எதேச்சாதிகாரத்துக்கு எதிரானதாகவே அந்தக் கோரிக்கை அமைந்திருந்தது. அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் உறுதியளித்திருந்தார்.
அவரும் இரு தடவைகள் அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அதனைச் செய்திருக்கவில்லை. தனது வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமன்றி 18 ஆவது திருத்தத்தினூடாக நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைக்கும் அவர் சென்றிருந்தார். சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை அவர் எடுத்திருந்தார்.

சட்டமா அதிபர் திணைக்களமும் ஜனாதிபதியினால் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடக்கூடிய வேட்பாளரின் வரையறையும் அகற்றப்பட்டிருந்தது. 18 ஆவது திருத்தம் ஜனாதிபதி ஒருவருக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியிருந்தது. அந்த அதிகாரத்துக்கு எதிரான குரல் பரந்தளவிலான தன்மையை கொண்டிருந்தது. 

கேள்வி: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைளை நீக்குவதற்காக மட்டும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் எமக்கு தேவைப்படுகின்றனவா?
பதில்: சட்டமும் ஒழுங்கும் கடந்த தசாப்த காலமாக சீர்குலைந்துள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் மரங்களில் கட்டி வைக்கப்பட்டனர். பொலிஸ் காவலில் சுமார் 100 சந்தேக நபர்கள் மரணமடைந்திருந்தனர். நீதிமன்றங்களில் எந்த வழக்குகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஊடகங்கள் மீது தாக்குதல் இடம்பெற்றிருந்தது. பயத்தினால் அரசாங்கத்தை அவர்கள் விமர்சித்திருக்கவில்லை.

குறைந்தது ஆயுதம் தரிக்காத 20 கைதிகள் கொல்லப்பட்டனர்.இந்த விடயங்கள் எவையும் கவனத்துக்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை. அரசியலமைப்பானது அரசாங்கத்தின் அதிகாரங்களிலிருந்தும் மக்களை பாதுகாப்பதற்கான கருவியாக இருக்கின்றது. அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்கமும் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை அரசியலமைப்பு வரையறைப்படுத்துகின்றது. மக்கள் உரிமைகள் அரசியலமைப்பில் பாதுகாக்கப்படுகின்றன. அரசியலமைப்பை எம்மால் மீற முடியாது.

அந்த அரசியலமைப்பு மக்களுக்கு உதவியாக இல்லை என்பதை நாங்கள் பார்த்தோம்.  அதனாலேயே 2015 ஜனவரி 8 இல் கடந்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என அவர்கள் நம்பியிருந்தனர். ஜனநாயகம் மீள நிலைநிறுத்தப்படுமென  அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். தெற்கைப் போன்று வடக்கிலுள்ள மக்களினாலும் அந்த உறுதிமொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. நாங்கள் அதனை புரிந்து கொள்வது அவசியம். மக்கள் தேசிய நல்லிணக்கத்திற்காக வாக்களித்திருந்தனர். 

கேள்வி: நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை திருத்துவதன் மூலம் அந்த இலக்கை எம்மால் வென்றெடுக்க முடியாதா?
பதில்: இல்லை, எம்மால் முடியாது. இந்த அரசியலமைப்பின் கீழ் சகலதுமே சீர்குலைந்துள்ளன. பிரதம நீதியரசர் குற்றவியல் பிரேரணைக்குள் உட்படுத்தப்பட்ட விதமானது நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை என்பதை காண்பித்தது. உயர் நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் தீர்ப்புகள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

விமல் வீரவன்ச போன்றவர்களின் விருப்பத்திற்கு அமைய பிரதம நீதியரசருக்கு எதிரான வழக்கை நீதிபதிகள் விசாரித்திருந்தனர். புதிய அரசியலமைப்பானது அது தொடர்பாக மாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு உள்ளது. அரசியலமைப்பை திருத்துவதனால் நாட்டை ஜனநாயகப்படுத்தவோ அல்லது நல்லிணக்கத்தை கொண்டுவரவோ முடியாது.

சுதந்திரம் பெற்று 69 வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்ப நாங்கள் தவறிவிட்டோம். அதற்காக புதிய அரசியலமைப்பு எமக்கு தேவைப்படுகிறது 1948, 1972, 1978 களில் அரசியலமைப்புகள் வரையப்பட்டன. அதற்கு மக்களின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை.  நாங்கள் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னர் பொதுமக்களுடன் கலந்துரையாடுவதும் அவர்களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்வதும் அவசியமானதாகும்.

கேள்வி: புதிய அரசியலமைப்பை வரைவதற்கு அரசாங்கத்திடம் 2/3 பெரும்பான்மை இல்லை என சிலர் வாதிடுகின்றனரே?
பதில்: பகிரங்கமாக அரசியலமைப்பு வரையப்பட்டுள்ளது.  நாங்கள் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டியுள்ளது.  அவர்கள் விரும்பாவிடில் மக்கள் அதனை நிராகரித்து விடுவார்கள். நாங்கள் வெவ்வேறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கின்றோம். அவற்றை பரிசீலிப்பது அவசியமாகும். இறுதியில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவது அவசியமாகும். 2/3 பெரும்பான்மையுடன் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டும்.  மக்களின் இறைமை தொடர்பாக இந்த விடயத்தில் நாங்கள் அச்சப்படக்கூடாது. 2015 மார்ச் 16 இல் 225 எம்.பி.க்கள் கொண்ட சபையை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றுவதற்கு பாராளுமன்றம் ஏகமனதாக தீர்மானித்தது. அதற்கு எதிரானவர்கள் என இப்போது சிலர் கூறுகின்ற போதிலும் அச்சமயம் யாவருமே இதற்கு இணக்கத்தை தெரிவித்திருந்தனர்.

அரசியலமைப்பு பேரவை அனைத்துக் கட்சி செயற்பாட்டு குழுவை நியமித்திருந்தது. 20 எம்.பி.க்களுடன் அரசியலமைப்பை வரைவதற்கு அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அதற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார். பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆர்.சம்பந்தன் ஆகியோரும் இதில் இடம்பெற்றிருந்தனர். விடயங்களை ஆய்வு செய்வதென செயற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. அதற்காக ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

நிதிக் குழுவின் தலைவராக பந்துல குணவர்தன இருக்கின்றார். வெளியே வேறுபட்ட கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தினாலும் சகல கட்சிகளும் இந்த நடவடிக்கைகளில் இணைந்துள்ளன. ஆறு குழுக்களும் ஆறு சிறந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. தற்போது அவை தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.  குறிப்பிட்ட சில விடயங்களில் கருத்தொருமைப்பாடு உள்ளது. ஆனால், அவை யாவும் செம்மையாக இருக்கவில்லை. சகல கட்சிகளுடனும் கலந்தாலோசிக்கப்படுகின்றன.

கேள்வி: லால் விஜேநாயக்கவினால் தலைமை தாங்கும் குழுவானது இலங்கை மதச்சார்பற்ற அரசாக இருக்கின்றது என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
பதில்: மதச்சார்பற்ற அரசு தொடர்பான தீர்மானம் குறித்து எவரும் தீர்மானமொன்றை எடுத்திருக்கவில்லை. ஆனால், அரசியலமைப்பின் சரத்து 9 ஐ திருத்துவதில்லையென ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளனர். சரத்து 9 பௌத்தத்துக்கு முன்னுரிமையை வழங்குகின்றது.

அரசு மதச் சார்பற்றதாக இருக்க வேண்டுமென சிலர் கூறுகின்றனர். அத்தகைய கருத்துகளும் பரிசீலனைக்கு எடுக்கப்படுவது அவசியமாகும். ஆனால், அந்த மாதிரியான எண்ணப்பாட்டை வெளிப்படுத்துதல் அந்த விடயம் ஏற்கனவே அமுல்படுத்தப்படுகின்றது என்று அர்த்தப்படுவதாக அமைந்துவிடாது.

கேள்வி: 3 நிக்காயாக்களின் பௌத்த பிக்குகளும் மாநாட்டை நடத்தி நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனரே?
பதில்: மகாநாயக்க தேரர்களின் கருத்தும் பரிசீலனைக்கு எடுக்கப்படுவது அவசியமாகும். தாங்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பது பற்றி கூறுவதற்கான சுதந்திரத்தை அவர்கள் கொண்டுள்ளனர். ஆனால், மக்களே இறைமை கொண்டுள்ளனர். ஆட்சியானது அதனை அடிப்படையாகக் கொண்டதாகும். தனிப்பட்டவர்கள் அல்லது குழுவினரைக் கொண்டதாக இறைமை அமைந்திருக்கவில்லை. அறிக்கையானது முக்கியமானதாகும்.

ஏனெனில், தலைமை பிக்குகளினால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அதனை ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் கலந்துரையாடியிருக்க முடியும். அவர்களின் அறிக்கை ஊடகங்களின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அரசியல்வாதிகளில் பலர் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர். அரசியலமைப்பின் சரத்து 8 தொடர்ந்து இருக்க வேண்டுமென அவர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்களுடன் கலந்துரையாடிய பின்பே அரசியலமைப்பு நகல்வரைபாக தயாரிக்கப்படும். முதலாவது நகல் வரைபு செயற்பாட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அந்த அறிக்கை பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும். அது தொடர்பாக அச்சப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
கேள்வி: பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் அங்கமாக விளங்கும் நீங்கள் அரசாங்கம் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பது போன்ற புரட்சிகரமான யோசனைகளை குறிப்பிட்டிருக்கவில்லையா?
பதில்: பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் இலக்கானது மக்களை சந்தித்து அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக அவர்களின் கருத்துகளைப் பெற்றுக் கொள்வதாகும். பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரைகளுடன் செயற்பாட்டுக் குழுவிற்கு அவர்கள் இதனை அறிவிப்பார்கள்.

20 விடயங்களில் பொதுமக்கள் அபிப்பிராயத்தை நாங்கள் நாடியிருந்தோம்.  எமது பரிந்துரைகளுடன் பொதுமக்களின் கருத்துகளை ஒன்றிணைத்து நாங்கள் முன்வைத்திருந்தோம். ஆயினும் குழுவின் உறுப்பினர்கள் யாவருமே இதுவரையும் இணக்கப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டுமென சிலர் அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போதைய சூழல் பெரும்பான்மையானோர் கருத்தானது அது தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடாக உள்ளது.  இந்த விடயம் குறித்து அரசியலமைப்பு பேரவை கவனத்திற்கு எடுக்கக்கூடும். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் அங்கீகாரம் வழங்காவிடில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறாது. பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்பும் குறிக்கோளுடன் எமது அறிக்கையை குறிப்பிட்ட சில ஆட்கள் தவறாக மேற்கோள் காட்டுகின்றனர். 

No comments:

Post a Comment