1983 ஜூலை இனக் கலவரத்தால் "கறுப்பு ஜூலை' என்ற பெயர் வரலாற்றில் பதிவேறியுள்ளது.
வரலாறு என்பது கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பாகும். அந்த வரலாறு உள்ளதை உள்ளபடி அதாவது நிகழ்ந்தவற்றை எதுவித மாற்றமுமின்றி வெளிப்படுத்துவதாயமைய வேண்டும். திரிபுகளோ, மறைப்புகளோ இடம்பெற்றால் அது வரலாறு என்ற பெறுமதியை இழந்துவிடும். நமது நாட்டில் பாடசாலை மாணவ, மாணவியருக்கு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதர வகுப்பு வரை கட்டாய பாடங்களில் ஒன்றாக வரலாற்றுப் பாடம் உள்ளதுடன், அதே பாடம் குறித்த தரப் பொதுப் பரீட்சையின் கட்டாய பாடமாகவும் உள்ளது.
ஒரு பெறுமதியான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் தேசிய இனத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அவை கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து நிகழ்ந்த நல்லவற்றையும் தீயவற்றையும் கண்டறிந்து எடைபோட்டு எதிர்காலத்தில் பயணிக்க வேண்டிய பாதையைச் செப்பனிட்டுக் கொள்ள கடந்த கால வரலாறு பெரும் துணை ஆற்றும்.
அதனால் தான் இனத்தின் வரலாறு, சமயத்தின் வரலாறு, நாட்டின் வரலாறு, உலகத்தின் வரலாறு என்று பல வரலாறுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் வாழ்ந்த நல்லவர்களின் வரலாறும் அதேபோல் வெறுக்கத்தக்க செயல் புரிந்தவர்களது வரலாறும் கூட பாடங்களாய் அமைந்துள்ளன. வரலாற்றை உறுதிப்படுத்தி உலகுக்கு வெளிப்படுத்த பல்வேறு ஆய்வுகளும் பெருஞ் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நமது நாட்டில் வரலாற்றின் பெறுமதி உணரப்பட்டிருந்த போதிலும் வரலாற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டுமென்று கூறப்பட்ட போதிலும் உண்மை வரலாறு உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தப்படுவதில் தயக்கம் காட்டப்படுகின்றது. மறைக்கப்படுகிறது, திரிபுபடுத்தப்படுகின்றது என்பதே நிலைமையாக வெளிப்படுகின்றது. நிகழ்ந்தவற்றை மறைத்து மாற்றி வெளிப்படுத்துவது உண்மை வரலாறு அல்ல. அத்துடன் வரலாற்றின் பெறுமதியை இழக்கவும் செய்துவிடும்.
1983 இல் இடம்பெற்ற இனவெறிப் பயங்கரவாதச் செயற்பாடுகளால் ஏழு தமிழர்கள் மட்டுமே கொல்லப்பட்டனரென்றும் எவரொருவரும் காயப்படவில்லை என்றும் அண்மையில் அதிகாரத் தரப்பு கூறியிருந்தது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பதற்கு இதுவோர் எடுத்துக் காட்டு. அந்த ஜூலைக் கொடுமையில் கொலை செய்யப்பட்ட, வெட்டி கொத்தி காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைப்பது நீதியல்ல.
நிகழ்ந்த கொள்ளைகள், எரிப்புகள், பறிப்புகள் இதுபோன்ற இழி செயல்கள் எதுவுமே நடைபெறவில்லையென்று கூறுவது மனித தர்மமா ? நீதியா? புத்தரின் போதனைக்கு மதிப்பளிப்பதாக புத்த சமயத்திற்கு முதலிடமளிப்பதாகக் கூறப்படும் நம் நாட்டில் பௌத்தத்தின் பஞ்சசீலக் கோட்பாடுகள் ஐந்தில் ஒன்றான பொய் சொல்ல மாட்டேன் என்ற உறுதி மொழி மீறப்படுகின்றது. புத்த பெருமானின் போதனை பௌத்த சமயக் கோட்பாடு அப்பட்டமாக மீறப்படுகின்றது, புறக்கணிக்கப்படுகின்றது, அலட்சியப்படுத்தி குப்பையில் வீசப்படுகின்றது. இதுவே உண்மை. யதார்த்த நிலையும் கூட.
1983 ஜூலை இனக் கலவரத்தால் "கறுப்பு ஜூலை' என்ற பெயர் வரலாற்றில் பதிவேறியுள்ளது. உலகமே அதிர்ச்சியடைந்த அந்த இன வெறிப் பயங்கரவாதம் நடைபெறவேயில்லை என்று எதிர்காலத்தில் கூறப்பட்டாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவு மழுங்கிய சிந்தனை நம் நாட்டில் உள்ளது. இக்கலவரம் இடம்பெற்ற காலத்தில் சுகாதார அமைச்சராகவிருந்த டாக்டர் ரஞ்சித் அத்தப்பத்து இலங்கையர்கள் ஆறு பேரில் ஒருவர் மனநோயாளி என்றார். இன்று அவர் இருந்திருந்தால் ஆறு பேரில் ஐவர் மனநோயாளிகள் என்றும் கூறக்கூடும்.
எது எவ்வாறாயினும் குறித்த வெறியாட்டம் உலகை உலுக்கியது. அண்டை நாடான இந்தியாவின் பிரதமராயிருந்த இந்திராகாந்தி அம்மையார் தன் நாட்டின் வெளிவிவகார அமைச்சரான பி.வி. நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பியது வரலாறு. 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் அதாவது ராஜீவ் ஜே.ஆர். ஒப்பந்தம் ஏற்பட அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க காரணமாயிருந்ததும் குறித்த 1983 ஜூலை வெறியாட்டமே என்பது பதிவாகும்.
அது மட்டுமல்ல இந்நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்வும் அதேபோல் சர்வதேசம் இலங்கையை நோக்கிய பார்வையைச் செலுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் நம் நாடு பொறுப்புக் கூற வேண்டிய குற்றவாளியின் நிலைக்கு உள்ளாக வேண்டிய நிலைக்கு ஆளானதும் குறித்த ஜூலைக் கொடுமைகளே என்பதை வரலாறு தெளிவாகவே பதிவேற்றியுள்ளது.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு போகாது. நம் நாட்டில் மறைக்கப்பட்டாலும் உலகம் மறக்காது இந்நாட்டில் இனப் பிரச்சினை. தமிழர் சிங்களவர் உறவு பாதிக்கப்பட வழிசெய்ததில் முக்கிய இடம்பெற்ற அந்த வெறியாட்டத்தை அது நடைபெறவில்லை, பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறுவது கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கப்படும் இன உறவுக்கும் நல்லெண்ணத்திற்கும் இடையூறாகவே அமையும்.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு என்று வரையறுத்துக் கூறப்படும் போது அக்கொடுமை நிகழ்ந்த காலத்தில் அதனுடன் தொடர்புபட்டதாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கையை எதனுடன் இணைப்பது? சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை. அதிலேயே இவ்வாறான கொலைக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.நாட்டில் எங்குமே பாதுகாப்பில்லை என்று முன்னாள் பிரதமரும் அன்றைய பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் கூறியதை எவராவது இல்லையென்பார்களா?
கொழும்பிலிருந்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு அகதி முகாம்களில் அடைக்கலமான தமிழர்களை வட பகுதிக்கு அழைத்துச் செல்ல இந்தியா அனுப்பிய சிதம்பரம் என்ற கப்பலைத்தான் மறைக்க முடியுமா? சிங்களப் பேரறிஞரான ஈ.டபிள்யூ. அதிகாரம் என்பவர் நடைபெற்ற கொடுமைகளை சகிக்க முடியாது இனவெறியர் மனநோயாளிகள் என்று கூறியமையும் பதிவிலுள்ளது.இன்று உலக அரங்கில் இனப் பிரச்சினையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்தவற்றுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய காலஎல்லை நிர்ணயிக்கப்பட்டு பிணையில் விடப்பட்டுள்ள குற்றவாளியின் நிலையிலுள்ள இலங்கை உலகம் ஏற்க முடியாத பொய்யான தகவலை வெளியிடுவதன் மூலம் பாதிப்பை எதிர்கொள்ளும் வழி ஏற்படலாமல்லவா?
பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்கென்று கூறப்படும் பொய்கள் இம்மக்களுக்கும் நன்மைதரப் போவதில்லை. அதேபோல் சிறுபான்மை மக்கள் மனதில் நாட்டின் மீது நம்பிக்கையையும் ஊட்டப் போவதில்லை. இதுவே உண்மை நிலை. சிங்கள மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். அது மட்டுமல்ல சிங்கள மக்களை இன வெறியர்களாக கொடுமையானவர்களாக உலகுக்கு காட்டவும் இது வழிகோலும் என்ற உண்மையும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
நமது நாட்டின் ஜூலை மாதங்களின் இறுதி வாரங்கள் வரலாற்றில் பதியப்பட்டவையாகவுள்ளன. 1977 ஜூலை மாத இறுதி வாரம் இனவெறிப் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றி பெற்ற கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதியில் தமிழருக்கெதிரான முப்பத்திரெண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
அன்றைய ஆண்டில் பொதுத் தேர்தலின் பின்னர் தமிழருக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் 1979 இலும் அதே நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. 1981 ஆகஸ்ட் பதினைந்தாம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தை மையப்படுத்தி வன்முறை ஏவப்பட்டது. அவ்வாண்டு அக்டோபர் மாதம் நடமாடும் சேவைகள் மூலம் களவாடப்பட்ட வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு எதுவித ஆதாரமும் கேட்கப்படாமல் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது. அதாவது கொள்ளைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
1983 ஜூலை இனவெறிப் பயங்கரவாதத்தின் சூடு இன்னும் தணியாது உலகம் முழுவதும் பேசப்படுமொன்றாக நிலைத்துள்ளது. அதைத் தொடர்ந்து 1987 இல் இந்திய அரசின் கண்டிப்பான அழுத்தத்தினால் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவது தவிர தனக்கு எல்லாம் முடியும் என்று ஆணவத்துடன் கூறிய அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இறங்கி வந்து ஒப்பந்தம் செய்யும் நிலை ஏற்பட்டது.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் தமிழ் மொழிக்கு நாட்டில் தேசிய மற்றும் அரச கரும மொழிகள் அந்தஸ்து தமிழரும் தேசிய இனத்தவர்கள் என்பதும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி தமிழ் என்பதும் 1987 ஜூலை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பெறுபேறாகும். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இலங்கை அரசாங்கம் விருப்புடன் செய்யப்பட்டதோ தமிழரின் நியாயமான போராட்டத்தின் பெறுபேறோ அல்ல. இந்தியாவின் அழுத்தமே காரணம் என்பதை நம்மில் பலர் புரியாதுள்ளனர்.
இவ்வாண்டு அதாவது 2017 ஜூலை மாத இறுதியில் சீன நாட்டுடன் தொண்ணூற்றொன்பது ஆண்டு குத்தகை அடிப்படையில் அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதி இலங்கையால் ஒப்பந்தம் செய்து கையளிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனை செலுத்த வழியின்றி இந்நிகழ்வு நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. காணி சொத்து உறுதிகளைப் பிணையாக வைத்து கடன் வாங்குவதற்கு இது ஒப்பானதாகும். உரிய காலத்தில் கடன் மீளச் செலுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். வல்லவனுக்கு வளைந்து கொடுத்துத் தானே ஆக வேண்டும். விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறப்பட்டு நாட்டு குடிகளான நாம் ஏமாற்றப்படுகின்றோமா?
வரலாறு என்பது நாம் படித்துப் பார்த்து ரசிப்பதற்கல்ல. கடந்து வந்த பாதையில் விட்ட தவறுகள் எவை என்பதை அறிந்து, புரிந்து மீளவும் அவை நிகழாவண்ணம் ஏற்றவை மேற்கொள்ள வழிகாண்பதற்கானது. நோய் என்ன என்பதை ஆராய்ந்து அது ஏற்பட காரணி என்ன என்பதைத் தெரிந்து வைத்தியம் செய்பவரே முறையாகக் கற்றறிந்த அனுபவம் மிக்க வைத்தியர்.
அதேபோல் நாட்டிலே புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைந்து நாட்டிலே இனங்களுக்கிடையே தேசிய சகவாழ்வு, நல்லெண்ணம், புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமென்ற மனப்பூர்வமான உண்மையான இதயசுத்தியான சிந்தனை இருந்தால் நிகழ்ந்த கொடுஞ்செயல்கள் மீளவும் இடம்பெறாதிருக்க வழி செய்ய வேண்டும். அதனால் வரலாற்றை மறைக்காமல் திரிபுபடுத்தாமல் உண்மையை உள்ளதை வெளிப்படுத்தி நாட்டுக்கு நன்மை செய்ய சகலரும் முன்வர வேண்டும்.எது எவ்வாறோ போர்த்துக்கேயரிடம் நாட்டை தானமாக ஒப்படைத்த கோட்டை அரசின் ஒப்பந்தமும் ஜூலை மாதம் தான் இடம்பெற்றதோ தெரியவில்லை.
No comments:
Post a Comment