Friday, July 21, 2017

செம்மொழி   நிலைக்கட்டும்
Bildergebnis für செம்மொழி
மொழிகளிலே தமிழ்மொழி தொன்மையானது, சிறப்பானது. இந்தியப் பண்பாட்டில் தமிழர்களின் பண்பாட்டுப் பங்கு அதிகம். இப்படி சிறப்பு வாய்ந்த மொழியை மற்ற மாநிலத்தவரும் அறியாமல் இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. தமிழினை, தமிழ்ப் பண்பாட்டினை பிற மாநிலங்களும் புரிந்து கொள்ளவும், அறிந்துகொள்ளவும் வேண்டும். இதற்கு மாநிலங்களிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றினார்.

இந்த உரையைக் கேட்டு மகிழ்வான மனநிலையில் இருந்த தமிழர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் அதிர்ச்சியளித்தது. இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், தன்னாட்சி நிறுவனமாக 2008 இல் தொடங்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை (Central Institute of Classical Tamil)  திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக மாற்றும் நடுவண் அரசின் திட்டம்!


தமிழ்மொழியை நடுவண் அரசு செம்மொழியாக அறிவித்த உடனே ஏற்பட்ட பலன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil). தமிழ்மொழியின் மேம்பாட்டிற்கும், உலக அரங்கில் தமிழ்மொழியின் சிறப்புகளைப் பரப்புவதற்கும் உயர் ஆய்வுகளை விரிவுபடுத்துவதற்கும் 2006 இல் நடுவண் அரசால் தன்னாட்சி நிறுவனமாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.


தொடக்க நிலையில் இந்த நிறுவனம் மைசூரில் உள்ள "இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (Central Institute of Indian Language)  இயங்கியது. இந்திய மொழிகளுக்காக தொடங்கப்பட்ட நிறுவனம் அது. தமிழ் செம்மொழித் தகுதிப்பாடு உடையது என்பதற்கான தக்க சான்றுகளுடன் நடுவண் அரசுக்கு, திட்டமுன்மொழிவை அந்த நிறுவனமே வழங்கியது.


அந்த நிறுவனத்தில் கல்விசார் நிலையில் உயரிய பொறுப்புகளில் அப்போது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகம் இருந்தனர். அதன் காரணமாக செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அங்கு செயல்பட்டது. இருப்பினும் வேறு ஒரு நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்குவது, அதன் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையாது என்பதால் அது 2008 இல் சென்னைக்கு இடம் மாற்றப்பட்டது.


சென்னையில் கடற்கரைச் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிறிது காலம் இயங்கியது. அதன்பின்னர் தற்போது தலைமைச் செயலகம் உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து தரமணிக்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக சென்னை பெரும்பாக்கத்தில் நடுவண் அரசின் பொதுப்பணித் துறையின் வாயிலாக தனி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில்தான் நடுவண் அரசின் "நீதி ஆயோக்' இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்து மற்ற மொழிகளுக்கான நிறுவனங்களை எல்லாம் அந்த அந்த மாநிலங்களில் செயல்படும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு மையமாக இணைத்துவிடலாம் என்று அண்மையில் ஆலோசனை கூறியுள்ளது.


அதன் அடிப்படையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைப்பது தொடர்பாக அப்பல்கலைக்கழகத்திற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதம் தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் ஆளுகைக் குழுவில் விவாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உருப்பெற்று மூன்றாண்டு கழிந்த பின்னர் 2009 இல்தான் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களுமே ஆளுகை நிலையில் தன்னாட்சித் தன்மை கொண்டு, நடுவண் அரசின் நிதியுதவியோடு செயல்படுகின்றன.


சற்று நுட்பமாகப் பார்த்தால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல்கலைக்கழக நிலையில் இருந்து மேம்பட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன (National Importants)  நிலை கொண்டது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகமே செம்மொழி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் உதவியோடு 20-12-2013 கல்வியாண்டில் எம்.ஏ., செம்மொழித் தமிழ் என்ற பாடத்தினை அறிமுகப்படுத்தி நடத்தி வருவதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.


எந்த ஒரு நிறுவனமும் தனித்தன்மையுடன் தன்னாட்சியுடனும் செயல்படுகின்றபோதுதான், அது தொடங்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்ற முடியும்.


இந்த நிலையில் செம்மொழி நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைக்கின்றபோது, அது தன் தனித்தன்மையை இழப்பதோடு மட்டுமல்லாது பல்கலைக்கழக மரபார்ந்த பணிகளில் ஈடுபட்டு அது சிதைவுறவும் வாய்ப்பு உள்ளது.
1970 இல் பாரிஸில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவில் தனிநாயக அடிகளார் தீவிரமாக முன் வைத்த ஆலோசனையின் பேரில்தான் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) அதே 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணா "இந்த நிறுவனம் பட்டங்கள் வழங்கும் கல்வி நிலையமாக ஆகிவிடலாகாது' என்று கூறினார். இதன்வழி செயல்படத் தவறி இன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பயிற்றுவித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைவுடன் பட்டம் வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாகவே சுருங்கிவிட்டதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.


இதேபோன்ற ஒரு நிலைக்கு செம்மொழி நிறுவனம் தள்ளப்பட்டுவிடக் கூடாது.
இந்திய அளவில் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (UGC) நிதியுதவியுடன் மொழிக்காக ஆறு மத்திய பல்கலைக்கழகங்கள் தற்போது செயல்படுகின்றன. சமஸ்கிருத மொழிக்காக மூன்று பல்கலைக்கழகங்கள் அதாவது, ஸ்ரீலால் பகதூர்சாஸ்திரி ராஷ்ட்ரீய சமஸ்கிருத வித்யபீடம்  புதுடில்லி, ராஷ்ட்ரீய சமஸ்கிருத சன்ஸ்தான்  புதுடில்லி, ராஷ்ட்ரீய சமஸ்கிருத வித்யபீடம்  திருப்பதி ஆகியவை.


இதேபோன்று இந்தி மொழிக்காக வார்தாவில் மகாத்மா காந்தி அந்தராஷ்ட்ரீய இந்தி விஸ்வ வித்யாலயா, உருதுமொழிக்காக கௌகாத்தியில் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகளுக்கான பல்கலைக்கழகம் ஆகியவை செயல்படுகின்றன.


இந்த நிலைக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை தரம் மேம்படுத்தி, அடையாளப்படுத்த வேண்டுமே தவிர அதன் அடையாளத்தை சிதைக்க முயலக் கூடாது.


நடுவண் அரசின் ஆளுகையின் கீழ், மொழி, இலக்கிய மேம்பாட்டிற்காக சில நிறுவனங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக சாகித்ய அகாடமி, இந்திய தேசியப் புத்தக நிறுவனம், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் போன்றவை.
இந்த நிறுவனங்கள் எல்லாம் அவை தொடங்கப் பெற்ற நோக்கத்தினை இடையூறு இன்றி நிறைவேற்ற அனுமதிக்கின்றபோது, இதேபோன்று தனித்தன்மை கொண்ட மொழி சார்ந்த செம்மொழி நிறுவனத்தினை மட்டும் மடைமாற்றம் செய்ய முயல்வது ஏன்?


இந்த நிறுவனம் தொடங்கப்பெற்ற 2006 ஆம் ஆண்டு முதல் அதாவது பதினொரு ஆண்டுகள் இதற்கு என்று முழுநேர இயக்குநர் இல்லை. நடுவண் அரசின் கல்வி நிறுவனங்களில் இருந்து ஒருவரை கூடுதல் பொறுப்பாளராக நியமிக்கின்றனர். அதனால் இதன் செயல்பாடுகளில் தேக்கம் ஏற்படுகிறது.


உலகளாவிய நிலையில் சிறப்புற்றுத் திகழும் வல்லுநர்களையும், பேராசிரியர்களையும் அழைத்துப் பணியமர்த்துவதுடன் இதன் ஆளுகைக் குழுவிலும் அவர்கள் இடம் பெற வகை செய்ய வேண்டும். நிறுவனத்தின் ஆளுகை உறுப்பினர்களை உடனே நியமித்து, ஆளுகைக் குழு கூடி அடுத்த பத்தாண்டுகளுக்கு தொலைநோக்குத் திட்டம் தயாரித்து (Vision Document) அதை நடைமுறைப்படுத்த முயலவும் வேண்டும்.


நடுவண் அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதி நல்கையைத் தொடர்ந்து முயன்று பெறுவதிலும், பெறப்பட்ட நல்கையை முழுமையாகப் பயன்படுத்தி பயனுள்ள திட்டப் பணிகளை தொய்வின்றித் தொடர்வதிலும் செம்மொழி நிறுவனம் இனித் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அறிஞர்களின் எதிர்பார்ப்பு.


1906 இல் "மதுரை தமிழ்ச் சங்கம்' ஒரு பல்கலைக்கழகமாக மலர வேண்டும் என மகாகவி பாரதியார் விரும்பினார். 1925 - 1926 இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்ற வேட்கை தீவிரமானது என்றாலும் 1981 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில்தான் தஞ்சையில் அது தொடங்கப்பெற்றது.


இதே காலகட்டத்தில் அதாவது 1981 இல் மதுரையில் 5 ஆவது உலகத் தமிழ்மாநாடு நடைபெற்றபோது தமிழ் அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்பட மதுரையில் ‘உலகத் தமிழ்ச் சங்கம்‘ ஏற்படுத்தப்படும் என அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அறிவித்து 1986 இல் தொடங்கியும் வைத்தார். ஆனால் 2012 இல்தான் அதற்கு மதுரை தல்லாகுளத்தில் வளாகம் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


நம்முடைய இப்போதைய தேவை உலகளாவிய நிலையில் உள்ள புலமைகளின் இணைப்பும் உறுதிப்பாடும்தான். அந்த நிலையை இந்த நிறுவனங்கள் எய்தி இருந்தால் இந்த இடர்பாடு நேர்ந்திருக்காது. இதனை சீர் செய்வது அந்த அந்த நிறுவனங்களின் கடமை.


அதேவேளை உலகம் முழுவதுவும் உள்ள தமிழர்களின் உணர்வுகளை, மரபுகளை, மதித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை அதே தன்னாட்சி ஆளுகை நிலையில் நிலைநிறுத்தி, நீடிக்கச் செய்வதுடன் மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுக்கச் செய்வது நடுவண் அரசின் தார்மிகக் கடமை!

No comments:

Post a Comment